இதுக்குத்தான் படிங்க படிங்கனு சொல்றது! CM 2031..முதல்வர் கனவில் திருமா! ஒரே போட்டோவால் ட்ரோலான விசிக

  • சென்னை: தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது ஒரு புகைப்படம். "சிஎம் 2031" என்ற நம்பர் பிளேட் உடன் டெஸ்லா காரில் திருமாவளவன் வலம் வருவது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர் சிறுத்தைகள். இதன் மூலம் திருமாவை முதல்வராக்க வேண்டும் என்ற ஆசை விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதில் தான் ஒரு முக்கிய ட்விஸ்ட்டே உள்ளது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தல் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்றது. தேர்தலை விட தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தான் அரசியல் களம் உச்சபட்ச கொதி நிலையில் இருந்தது. ஆண்ட திமுக, அதற்கு முன்பு ஆண்டு அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளியது தவெக.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் முதன் முறையாக தனித்து தேர்தலில் களம் கண்ட தமிழக வெற்றி கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியானது. ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் இல்லாததால் கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது.

    பின்னர், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்தனர். இடையில் அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கவும், அதற்கு பிறகு திருமாவளவனை முதல்வராக்கவும் முயற்சிகள் நடந்ததாக வெளியான பேச்சுகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இறுதியில் ஒரு வழியாக முதல்வராக விஜய் பதவியேற்றார்.

    Advertisement

    ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விஜய் ஏற்கனவே சொல்லி இருந்ததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இதற்கிடையே திமுகவிலிருந்து கூட்டணி கட்சிகள் பிரிந்து சென்றதால் அந்த கட்சியினர் மற்ற கட்சிகளை மிகக் கடுமையாக சாடினர். அதுமட்டுமல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலினை தவிர மற்ற அனைத்து தலைவர்களும் கூட்டணிக் கட்சிகளை வெளுத்து வாங்கினர்.

    இதற்கிடையே விசிக அவ்வப்போது சில விவகாரங்களில் முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. சொல்லப்போனால் அமைச்சர் வன்னியரசுவை தவிர விடுதலை சிறுத்தைகளின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் விஜய் அரசுக்கு எதிராக தான் பேசி வருகின்றனர். ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி ஏன் திருமாவளவனே சில நேரங்களில் விஜய் அரசை விமர்சித்திருக்கிறார். குறிப்பாக பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் திருமாவளவன் பேசியது விஜய் தரப்பை ரசிக்க வைக்கவில்லை.

    Advertisement

    இதற்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகளின் மாநாடு ஒன்று நடைபெற்றது. அப்போது பேசிய திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கிறோம் அடுத்து ஆட்சிதான் என்றார். அதாவது 2031 சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் ஆட்சியைப் பிடிக்கும் என கூறி இருந்தார். தொடர்ந்து அதே ஆசையை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

    இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் செல்கிறார் திருமாவளவன். அந்த காரில் சிஎம் 2031 என எழுதப்பட்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதனை அதிக அளவில் பரப்பி வருகின்றனர். சொல்லப்போனால் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கூட அதனை பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் திருமாவளவனுக்கு முதல்வர் ஆசை இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அதனையே விரும்புகின்றனர் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

    Advertisement

    முன்னரே கூறியது போல பல நேரங்களில் முதல்வர் கனவுடன் திருமா இருந்திருக்கிறார். அதனைத் தான் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வெளிப்படுத்தி வருகின்றனர் என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அந்த புகைப்படம் போலி என்பது கூட தெரியாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பகிர்ந்து வருவது தான்.

    அதாவது திருமாவளவன் ஊர்வலமாக வரும் கார் டெஸ்லா நிறுவனத்தின் கார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சிஎம் 2031 என ஒயிட் போர்டில் நம்பர் பிளேட் வைக்கப்பட்டிருக்கிறது. டெஸ்லா கார் மின்சார கார் என்பதும் அதற்கு பச்சை நிறத்தில் தான் நம்பர் பிளேட் வழங்கப்படும். இன்னும் சொல்லப்போனால் கடந்தாண்டு தான் டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு வந்தது. இன்னும் முழுமையாக டெலிவரி தொடங்கவில்லை. அது தெரியாமல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து மாஸ் காட்டி வருகின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள். அதே நேரத்தில் அந்த பதிவில் திமுகவினரும் தமிழக வெற்றிக் கழகத்தினரும் புகுந்து கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

    English Summary

    A viral Tesla photo featuring “CM 2031” sparks debate over Thirumavalavan’s future political ambitions and VCK’s ruling-party plans.