2 கொடுக்க முடியாது.. விசிகவுக்கு ஒரு வாரியத் தலைவர் பதவி தான்! திருமாவளவனிடம் நோ சொன்ன ஆதவ் அர்ஜுனா

  • சென்னை: விசிக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற பேச்சுவார்த்தை நடந்த போதே, அக்கட்சிக்கு 2 வாரியத் தலைவர்கள் பதவியும் அளிப்பதாக தவெக தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் அதிமுகவில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இனி ஒரு வாரியத் தலைவர் பதவிதான் கொடுக்க முடியும் என்று ஆதவ் அர்ஜுனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தல் முடிவுக்கு பின் தவெக மற்றும் விசிக இடையில் நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆட்சி, அதிகாரத்தில் முதல்முறையாக விசிக பங்கேற்றுள்ளதால், அக்கட்சியினர் உற்சாகமாக இருக்கின்றனர். முதலில் விசிக வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், விசிக அமைச்சரவையில் பங்கேற்றது.

    Advertisement

    அப்போதே விசிகவுக்கு 2 வாரியத் தலைவர்கள் பதவியும் அளிக்கப்படும் என்ற உத்தரவாதம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் திருமாவளவனிடம் கொடுக்கப்பட்டது. இதனை திருமாவளவன் நெருக்கமான விசிகவினரிடம் மட்டும் கூறியதால், அக்கட்சியினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தனர். இதனால் அந்த 2 வாரியத் தலைவர் பதவி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அதிமுகவில் இருந்து தவெக பக்கம் சாயும் நிர்வாகிகள் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கிறது. இன்னும் 5 எம்எல்ஏ-க்கள் வருவார்கள் என்று தவெகவும் எதிர்பார்க்கிறது. சில முக்கிய தலைகள் வரும் போது அவர்களுக்கு கட்சிப் பதவி அல்லது முக்கிய பொறுப்புகளை கொடுக்க வேண்டிய தேவை உருவாகும். இதனால் விசிகவுக்கு 2 வாரியத் தலைவர் பதவி கொடுக்க முடியாத சூழல் உள்ளது.

    Advertisement

    இதனால் முதல்வர் விஜய் உடனான கூட்டணி கட்சியினர் விருந்தில் பங்கேற்ற திருமாவளவனிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதாவது விசிகவுக்கு 1 வாரியத் தலைவர் பதவிதான் அளிக்க முடியும். அதுவும் நாங்கள் சொல்லும் விசிக நிர்வாகிக்கு தான் நீங்கள் வழங்க வேண்டும் என்று கெடுபிடி விதித்துள்ளார்.

    இதனால் திருமாவளவன் அதிருப்தி அடைந்தாலும், வேறு வழியில்லாததால் சரி என்று சொல்லி இருக்கிறார். திருமாவளவனின் அதிருப்தியை உணர்ந்த ஆதவ் அர்ஜுனா, அதற்காக தான் தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அவரின் பெயரை சொல்லியதாக அக்கட்சியினர் பேசத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் விசிக உடனான உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் முடிவில் தவெக தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Thirumavalavan: Aadhav Arjuna Signals Thirumavalavan that TVK Can Only Offer One Board Post to VCK Instead of Two