“தவெகவும் திமுகவும் ஒரே அணியில் பயணிக்க வேண்டும்”.. திருமாவளவனின் எக்குத்தப்பு ஆசை!

  • சென்னை: "தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள தவெகவும், திமுகவும் ஒரே அணியில் சேர வேண்டும். தேசிய அரசியலில் பாஜகவை எதிர்க்க இரு கட்சிகளும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்ற புரிதல் எனக்கு உள்ளது" என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கு முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவளித்து, கூட்டணியில் இணைந்தது. அதைத்தொடர்ந்து இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவளித்த நிலையில், விசிகவும், தவெக அரசுக்கு ஆதரவளித்தது. ஆட்சியில் பங்கெடுத்தாலும் கூட இப்போது வரை கூட்டணி குறித்த விஷயத்தில் தெளிவில்லாத வகையில்தான் கருத்துகளை தெரிவித்து வருகிறார் திருமாவளவன்.

    Advertisement

    திருமாவளவன் பேசும்போது, "அமைச்சரவையில் பங்கேற்றதாலேயே தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாக சொல்ல முடியாது. தற்போது வரை தவெக கூட்டணியில் விசிக இணைய அதிகாரப்பூர்​வ​மாக எந்த நிகழ்​வும் நடைபெறவில்​லை. தவெக கூட்​டணி தொடர்​பாக முதல்​வர் விஜய் தலைமையில் நடை​பெற்​ற கூட்​டத்​தில், கூட்​டணி குறித்து இறுதி முடிவு எடுக்​க​வில்​லை.

    எனவே, தவெக தலை​மை​யில் ஒரு கூட்​டணி அமையவில்லை என்​பது​தான் இன்​றைய நிலை. நாங்கள் எடுக்​கின்ற முடிவு​கள் ஒவ்​வொன்​றை​யும் கூட்​டணி தலைமை​யான மு.க.ஸ்​டா​லினிடம் பகிர்ந்​து​ கொண்டோம். அந்த உறவு இன்​னும் தொடர்​கிறது" என்று தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

    தவெக கூட்டணி கட்சிகளில் ஒன்றான மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், திருமாவளவன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், திருமாவளவன் கருத்துக்கு நோபல் பரிசு அளிக்கலாம் என கிண்டலாக தெரிவித்தார். இந்நிலையில் தான், நோபல் பரிசு எனக்கு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன் என விசிக தலைவர் திருமாவளவன் வைகோவுக்கு பதிலடி கொடுத்தார்.

    தொடர்ந்து பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் திமுக மற்றும் தவெக இடையே அரசியல் ரீதியாகப் பலத்த போட்டி மற்றும் எதிர் நிலைப்பாடுகள் இருந்தாலும், தேசிய அளவில் பாஜகவின் அரசியலையும் மதவாதத்தையும் வீழ்த்த, கொள்கை எதிரியான தவெக-வும், தொடர்ந்து பாஜகவை எதிர்த்து வரும் திமுகவும் ஒரே அணியில் பயணிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    Advertisement

    என்னுடைய இந்த தேசிய அளவிலான பார்வையைத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாலோ அல்லது ஊடகவியலாளர்களாலோ எளிதில் புரிந்துகொள்ள முடியாது. திருமாவளவன் என்ன குழப்புகிறார், அவருக்கு என்ன ஆச்சு? என்று கேட்பார்கள். ஆனால், அது அவர்களின் புரிதலில் உள்ள சிக்கலே தவிர, என் பார்வையில் உள்ள சிக்கல் அல்ல" என்று பேசியிருக்கிறார் திருமாவளவன்.

    தவெக அமைச்சரவையில் இடம்பெற்றபோதிலும், முழுமையாக இன்னும் தவெக அணியில் சேராமல் இருக்கிறார் திருமாவளவன். திமுகவையும் முழுமையாக பிரிய முடியாமல் குழப்ப மனநிலையில் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்தச் சூழலில் தவெகவும் திமுகவும் ஒரே அணியில் பயணிக்க வேண்டும் என திருமாவளவன் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    “TVK and the DMK, which are at loggerheads in Tamil Nadu politics, should join the same alliance. I hold the view that both parties need to be in the same camp to oppose the BJP in national politics,” said VCK leader Thirumavalavan.