“முதலமைச்சர் விஜய் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது - கூட்டணிக்குள் இருந்து திருமாவளவன் குரல்!

  • சென்னை: தமிழக சட்டசபையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய் செய்த உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காவல்​துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்​துக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்​துப் பேசினார். அப்போது, மிசா குறித்துப் பேசும்போது, மு.க.ஸ்டாலினை சுட்டிக்காட்டுவது போன்று தனது உடல்மொழியை சற்று மாற்றிப் பேசியிருந்தார்.

    Advertisement

    முதல்வர் விஜய்யின் இந்தச் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், "எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை" என்று முதல்வர் விஜய் நேற்று விளக்கம் அளித்திருந்தார்.

    அதோடு, சட்டப்பேரவையில் நேற்று பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "மிசா காலங்களில் திருட்டு வழக்கு, வழிப்பறி வழக்கு, பெண்கள் குறித்த வழக்குகளில் கூட யாரையும் கைது செய்யலாம். எனவே அப்போது கைதான எல்லோரையும் மிசாவில் கைது செய்ததாக கருத முடியாது. 20 அம்ச திட்டத்தை அறிவித்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குறித்து, '21 அம்ச திட்டம்' என்று அவதூறாக பேசியவர்தான் மு.க.ஸ்டாலின். இதுபோன்ற விஷயங்களின் அடிப்படையில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

    Advertisement

    பெண்கள் குறித்து அவதூறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்றுதான் குறிப்புகள் உள்ளதே தவிர, மிசா சட்டத்தில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என எந்தக் குறிப்பிலும் கிடையாது. அன்று ஸ்டாலின் செய்ததையே இப்போது எதிர்க்கட்சித் தலைவரும் செய்கிறார். ஆபாச நதியாக பேசுவதை அவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

    இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் செயலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தனது கருத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்வரின் உடல்மொழி: மனித மாண்புகளுக்கு எதிரானதாகும்! காவல்துறை மானியக் கோரிக்கையில் முதல்வர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.

    Advertisement

    எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம். எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது.

    தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.

    அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.

    Advertisement

    முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.

    மிசா காலத்து அரச பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். மாண்புமிகு அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற்றுள்ளது. விசிகவின் வன்னியரசு தற்போது சமூக நீதித்துறை அமைச்சராக உள்ளார். இந்தச் சூழ்நிலையில், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமாரை திருமாவளவன் கண்டித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    VCK leader Thol Thirumavalavan has condemned the body language displayed by Chief Minister Vijay in the Tamil Nadu Assembly—mocking former Chief Minister Stalin—as being contrary to human dignity.