சென்னை: "தவெகவுடன் நான் கைகோர்த்து இருப்பது காலம் இட்ட கட்டளை. விசிக அதிகாரத்தில் பங்குபெற இதைவிட வேறு என்ன நல்ல வாய்ப்பு உள்ளது? டெல்லியில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் கூட நாம் விமர்சிக்கும் பாஜக, சிறிய கட்சிகளுக்கும் அமைச்சர் பதவியை தருகிறார்கள்" என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, "தமிழ்நாடு அரசியல் களத்தின் திசையை தீர்மானிக்கும் வகையில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது. மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் விசிக இணைந்துள்ளது. விசிக எந்தச் சூழலிலும் தனிநபரை முன்னிறுத்தியோ, பதவி அல்லது அதிகாரத்தை முன்னிறுத்தியோ அரசியல் முடிவுகளை எடுத்ததில்லை. கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே முடிவுகளை எடுத்துள்ளது. தவெக பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கை ஆசான்களாக முன்னிறுத்தியுள்ளது. இதனால், தவெக-வுடன் இணைந்து செயல்படுவதில் விசிகவுக்கு கொள்கை முரண்பாடு இல்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், தவெக தனியாகவும் போட்டியிட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு தமிழக மக்கள் 108 இடங்களை வழங்கியுள்ளனர். அந்தத் தீர்ப்பு நிறைய பேருக்கு பிடிக்காமல் இருக்கலாம். கசப்பாக இருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும். தமிழக அரசியலில், இரு துருவ நிலை மாறி மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் புதிய அரசியல் சக்தியாக த.வெ.க உருவெடுத்துள்ளது. அந்தக் கட்சியை குறைத்து மதிப்பிடாமல், மக்கள் அளித்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல் சூழலை அணுக வேண்டும். தேர்தலுக்கு முன்பே கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து தவெக தலைவர் ஜோசப் விஜய் வெளிப்படையாக பேசியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நீண்ட காலமாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது. அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக முன்கூட்டியே அறிவித்திருந்த தவெகவுடன் இணைந்து செயல்படுவதற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆனால் பதவிக்காகவோ, அமைச்சர் பதவிக்காகவோ விசிக இந்த முடிவை எடுக்கவில்லை. தமிழக அரசியலில் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம். மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்கும் வலுவான கூட்டணியாக இந்த அணி உருவாக வேண்டும். தவெகவுடன் நான் கைகோர்த்து இருப்பது காலம் இட்ட கட்டளை. விசிக அதிகாரத்தில் பங்குபெற இதைவிட வேறு என்ன நல்ல வாய்ப்பு உள்ளது? டெல்லியில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் கூட நாம் விமர்சிக்கும் பாஜக, சிறிய கட்சிகளுக்கும் அமைச்சர் பதவியை தருகிறார்கள்." எனப் பேசி உள்ளார் திருமாவளவன்.