சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனக்கு காலையிலேயே போனில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மத்திய ரயில்வே துறை அஸ்வினி வைஷ்ணவ் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இதனை வைத்து பாஜகவின் கொள்கையை எதிர்ப்பது வேறு, தனி நபர் உறவு என்பது வேறு என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக உடனான கூட்டணியில் இருந்து விசிக விலகியது. தவெக அமைச்சரவையிலும் விசிக இடம்பெற்றது. விசிக சார்பாக வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். தவெக அமைச்சரவையில் இருந்தாலும், திமுக உடன் நட்பு தொடர்கிறது.. அதேபோல் தவெக உடன் கூட்டணி அமைக்கவில்லை என்று திருமாவளவன் கூறினார்.
இதற்கு திமுகவினர் மத்தியில் சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இன்னொரு பக்கம் மதிமுக மற்றும் விசிக இடையிலும் மறைமுக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விசிக நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், காலை 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. அதனை எடுக்க முடியவில்லை. பின்னர் மீண்டும் அழைத்தேன். அப்போது எனக்கு, உங்களிடம் அமித்ஷா பேச வேண்டும் என்கிறார் என்று சொன்னார்கள். பின் அமித்ஷா, திருமா ஜி.. How are you? How old you? Best Wishes என்று பிறந்தநாள் வாழ்த்து கூறினார். என்னுடைய சான்றிதழில் பிறந்தநாள் ஜூலை 10 என்று எழுதிவிட்டார்கள். ஆனால் ஜாதகத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி பிறந்தநாள் என்று எழுதப்பட்டது. அதனால் சான்றிதழை மாற்ற முடியாது. மீண்டும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழில் எனக்கு வாழ்த்து கூறினார். அவருக்கு தமிழ் தெரியுமாம்.. அவரும் பாஜகக்காரர் தான்.. என்னுடைய வீடு தேடி வந்து அவரின் இல்லத் திருமண விழாவிற்கு அழைப்பிதழ் வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றேன். பாஜகவின் கொள்கையை எதிர்ப்பது வேறு.. தனி நபர் உறவு என்பது வேறு.. திமுகவுடன் நல்ல உறவில் இருக்கிறோம்.. தவெக அமைச்சரவையில் இருந்தாலும், திமுகவுடன் நட்பு தொடர்கிறது என்றேன்.. இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரசியல்.. இங்கு போனால் அங்கு பேசக் கூடாது. அங்கு போனால் இங்கு பேசக் கூடாது.. ஜெயலலிதா இருந்த போது, அதிமுகவினர் யாராவது திமுகவை பார்த்தால் ஓட்டம்பிடித்துவிடுவார்கள். அதன் தாக்கம் இன்னும் இருக்கிறது.. அதனை உடைத்தவன் திருமாவளவன் என்று கூறினார். மேலும் சில மாதங்களுக்கு முன் விசிக எம்பி ரவிக்குமாருக்கும் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.