கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை! அமைச்சரவையில் திருமாவா? மெகா குழப்பத்தில் சிறுத்தைகள்! என்ன காரணம்?

  • சென்னை: தமிழக அரசியலில் தற்போது மிக அதிகமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமைச்சரவையில் இணையப் போகிறாரா? இல்லையா? என்பதுதான். தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பிறகு, கூட்டணி கட்சிகளின் அடுத்தகட்ட நிலைப்பாடுகள் குறித்த பேச்சுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், திருமா அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்கிறார்.. கட்சியினர் வேண்டுமென்கிறார்கள் என பேச்சு அதிகமாக உள்ளது. பதவி கேட்டால் பேரம் நடந்தது உண்மையாகும் என்பதால் தான் திருமா அமைதி காக்கிறார் என்கின்றார் சிறுத்தைகள்.

    Advertisement

    2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறியது. ஆனால் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டவில்லை.

    Advertisement

    இதனால், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டது. இதன் பின்னர் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

    தவெக கூட்டணி

    காங்கிரஸ் தரப்பில் இருந்து சில மூத்த நிர்வாகிகள், "அமைச்சரவை வாய்ப்பு குறித்து தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது" என மறைமுகமாக குறிப்பிட்டனர். ஆனால் விசிக தரப்பில் ஆரம்பத்திலிருந்தே ஒரு எச்சரிக்கையான அணுகுமுறை இருந்தது. "வெளியிலிருந்து ஆதரவு" என்ற நிலைப்பாட்டை கட்சி முன்னிலைப்படுத்தியது. இருப்பினும், விசிகவின் சில நிர்வாகிகள் மட்டத்தில் வேறு மாதிரியான விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    அதிமுக -திமுக கூட்டணி

    தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக - அதிமுக இணைப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியதும், தமிழக அரசியல் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக, " அதிமுக -திமுக கூட்டணியை உருவாக்க முயற்சி நடந்ததா?" என்ற கேள்வி எழுந்தது. அந்த சூழலில், திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்வைக்க முயற்சி நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதை அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதி செய்யவில்லை என்றாலும், அப்போது விசிக காட்டிய மௌனம் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

    விசிக

    அதோடு, தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதில் விசிக தாமதம் காட்டியது கூட பல சந்தேகங்களை உருவாக்கியது. இடதுசாரி கட்சிகள் ஆதரவு அறிவித்த பிறகும், விசிக உடனடியாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. பின்னர் மே 9ஆம் தேதி ஆதரவு கடிதம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் விஜய் அரசு அமைந்தது. இந்த நிலையில், அமைச்சரவையில் இணைய வேண்டுமா வேண்டாமா என்ற விவகாரத்தில் திருமாவளவன் இன்னும் முழுமையான முடிவை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    Advertisement

    அமைச்சரவையில் விசிக

    "பதவிதான் முக்கியம் என்றால், காங்கிரசுக்கு முன்பே தவெகவுக்கு ஆதரவு அளித்திருப்பேன்" என்ற அவரது கருத்து அரசியல் அர்த்தமுள்ள ஒன்றாக பார்க்கப்படுகிறது. விசிகவில் ஒரு தரப்பு, "அமைச்சரவையில் பங்கேற்றால் தான் கட்சியின் அரசியல் செல்வாக்கு உயரும்" என்று வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வந்தும் அதிகாரத்தில் பங்கு கிடைக்காதது குறித்து சில நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

    தவெகவுக்கு ஆதரவு

    ஆனால் மற்றொரு தரப்பு, "இப்போது அமைச்சரவையில் சேர்ந்தால், தேர்தலுக்கு முன் பேரம் நடந்தது உண்மை என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யும்" என்று எச்சரித்து வருகிறதாம். அதனால்தான் திருமாவளவன் மிகவும் கவனமாக நடந்து கொள்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, "தவெகவுக்கு ஆதரவு அளித்ததற்குப் பதிலாக அமைச்சரவை கேட்கிறார்" என்ற விமர்சனம் எழுந்துவிடக் கூடாது என்பதில் அவர் தீவிரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    ஆதரவு தொடருமா?

    மேலும், விசிக என்பது வெறும் தேர்தல் கூட்டணி கட்சி அல்ல; கொள்கை அடிப்படையிலான இயக்கம் என்ற அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய அவசியமும் திருமாவளவனுக்கு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதனால் தான் உடனடியாக பதவி கோராமல், கட்சிக்குள் விவாதங்களை நடத்தி முடிவு எடுக்க முயற்சி நடக்கிறது. இந்நிலையில், "வெளியிலிருந்து ஆதரவு தொடருமா? அல்லது எதிர்காலத்தில் அமைச்சரவையில் இணைவார்களா?" என்பது தமிழக அரசியலில் அடுத்த பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

    English Summary

    Debate intensifies within VCK over joining Vijay-led Tamilaga Vetri Kazhagam government and accepting cabinet berths.