3 டிமாண்ட் வைத்த திருமாவளவன்.. 3 எழுத்து கட்சியை மாற்றாக யோசிக்கும் விஜய்! தவெக கூட்டணியில் மாற்றம்?


  • சென்னை: தவெக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, 3 முக்கிய டிமாண்ட்களை வைத்து விஜய்யை நெருக்கி வருகிறது. இப்படி இருக்கையில், விசிக நெருக்கடியால் அக்கட்சிக்கு பதில் மாற்று கட்சியை கூட்டணியில் சேர்க்க விஜய் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    தவெக கூட்டணியில் விசிக இணைந்ததில் இருந்து சலசலப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு, பெரும்பான்மை கிடைக்காமல் இருந்த நேரத்தில் தங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளை தவெக அணுகி இருந்தது.

    Advertisement

    நிலைப்பாட்டை மாற்றிய விசிக

    இப்படி இருக்கையில், இடதுசாரிகள் என்ன நிலைப்பாட்டை அறிவிக்கிறார்களோ அதேதான் விசிகவின் நிலைப்பாடு என்று திருமாவளவன் கூறியிருந்தார். இதில் ட்விஸ்ட் என்னவெனில், இடதுசாரிகள் விஜய் உடன் சேர ஒப்புக்கொண்டாலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க மாட்டோம்.. அதாவது எங்களுக்கு அமைச்சர் பதவியெல்லாம் ஒன்னும் வேணாம் என்று ஒதுங்கிக்கொண்டனர்.

    இந்த விஷயத்தில் திருமாவளவன் சிக்கிவிட்டார். இடதுசாரிகள் நிலைப்பாட்டில் இருப்போம் என்று சொன்ன அவர், அமைச்சர் பதவியில் இடம் பெற்றார். விசிக சார்பில் வன்னி அரசு, சமூகநீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    விசிகவின் டிமாண்ட்கள்

    அதன் பின்னரும், இந்த துறை சரிபட்டு வராது.. வேறு துறையை ஒதுக்க வேண்டும் என்று விசிக அழுத்தம் கொடுத்திருக்கிறது. இத்துடன் நிற்காமல், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட தவெக ஓகே சொல்ல வேண்டும் என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. இதுபோக வாரிய பதவிகளை கேட்டும் சிறுத்தைகள் சீறியிருக்கின்றனர். இந்த டிமாண்டை முன்வைத்து திருமாவளவன் காய் நகர்த்தி வருவதாகவும், ஆனால் முதலமைச்சர் விஜய் இதுவரை எதற்கும் ஓகே சொல்லாமல் இருப்பதால் விசிக கையை பிசைந்துக்கொண்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    யோசிக்கும் விஜய்

    தவெகவுக்கு விசிகவின் ஆதரவு முக்கியம்தான். ஆனால், அதெல்லாம் இடைத்தேர்தல் வரைக்கும் தான். இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றுவிட்டால் விசிகவை கழற்றிவிட்டுவிடலாம். அதற்கு முன்னர் விசிக கழன்று போய்விட்டால் ஆட்சிக்கும் சிக்கல், கூட்டணிக்கு இருக்கும் இமேஜ் உடைந்துவிடும். எனவே இந்த விஷயத்தை விஜய் பொறுமையாக அணுக திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், விசிக ஓவராக நெருக்குகிறது எனில், அதற்கு மாற்றாக பாமகவை உள்ளே கொண்டுவரவும் தவெக தலைமை யோசித்திருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாமகவை உள்ளே கொண்டு வந்தால் இந்த பிரச்சனைகள் இருக்காது என்று சிலர் ஐடியா கொடுத்திருக்கிறார்கள். இருப்பினும் பாஜகவுடன் ஓவர் நெருக்கம் காட்டிய கட்சியை பக்கத்தில் வைத்துக்கொள்வது கூட்டணியின் தன்மையை கெடுக்கலாம் என்றும் தவெக தலைமை யோசித்திருக்கிறது.

    Advertisement

    மாறும் கூட்டணி

    இப்போது தவெக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல், விசிக கட்சிகள் இருக்கின்றன. இந்த கட்சிகள் எல்லாம் ஜனநாயக கட்சிகள். ஓரளவு இடது சிந்தனை கொண்ட கட்சிகள். ஆனால், பாமகவை அப்படி குறிப்பிட்டுவிட முடியாது. என்னதான் தங்கள் வழிகாட்டிகளில் ஒருவராக காரல் மார்க்ஸை பாமக வைத்திருந்தாலும் கூட.. அக்கட்சிக்கு இருக்கும் இமேஜ் வேறு. இப்படி ஒரு கட்சியை கூட்டணிக்கு கூப்பிடுவது.. வேலியில் போகிற ஓணானை பிடித்து நாமே நமது வேட்டிக்குள் விட்டுக்கொள்வதற்கு சமம் என்றும் சிலர் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

    எனவே எந்த பக்கம் போவது என்று தவெக குழப்பத்தில் இருக்கிறது. இப்போதைக்கு விசிகவின் கோரிக்கைகளை கிடப்பில் போடுவோம், ரொம்பவும் பிரஷர் கொடுத்தால்.. ஒன்னு ரெண்டு கோரிக்கையை நிறைவேற்றுவோம்.. மற்றதை இடத்தேர்தலுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தவெக பிரச்சனையை ஆறப்போட்டு வைத்திருக்கிறது.

    English Summary

    Thirumavalavan Pressures Vijay: The Viduthalai Chiruthaigal Katchi (VCK), a partner in the TVK alliance, is pressuring Vijay by putting forward three key demands. Amidst this situation, reports suggest that Vijay is considering replacing the VCK with another party in the alliance due to the pressure being exerted by them.