கம்யூனிஸ்ட்டுகளை தொடர்ந்து.. திருமாவளவனும் எதிர்ப்பு? விஜய்க்கு எதிராக திரும்பும் கூட்டணிகள்

  • சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட முதலமைச்சர் விஜய் முடிவெடுத்திருக்கும் நிலையில், இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், தற்போது விசிக தலைவர் திருமாவளவன் சொன்ன கருத்து கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    தற்போது உள்ள பழைய தலைமை செயலகத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே புதியதாக ஒரு தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று விஜய் யோசித்தார்.

    Advertisement

    இந்த யோசனைக்கு சரியான இடம் பட்டினம்பாக்கம்தான் என்று முடிவெடுக்கப்பட்டு, அடுத்தக்கட்ட பணிகளுக்காக அரசு அதிகாரிகள் களமிறக்கப்பட்டனர். ஆனால், மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பட்டினம்பாக்கம் மீனவர்கள், அரசின் இந்த யோசனையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். இன்னைக்கு தலைமை செயலகம் வரும், அதிகாரிகள் எல்லாம் இந்த வழியாகத்தான் போவார்கள்.. அப்போது நாங்கள் விற்கும் மீன்கள் அவர்களுக்கு நாற்றமாக தோன்றும்.. கடைசியில் எங்களை காலி செய்துவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

    அதேபோல தவெக அரசு அமைய ஆதரவு தெரிவித்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அரசின் இந்த யோசனையை எதிர்த்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

    Advertisement

    இந்நிலையில் புதிய தலைமை செயலகம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, "நாங்கள் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் இருக்கிறோம். காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் இந்த கூட்டணியில் இருக்கின்றன. எனவே, வருகின்றன இடைத் தேர்தலில் தவெக வெற்றிக்கு விசிக பங்காற்றும். பல முனை போட்டி நிலவினாலும் பிரச்சனை இல்லை. காரணம், நமது நாடு ஜனநாயக நாடு.

    கம்யூனிஸ்ட் கட்சிகள், தொடக்கத்திலிருந்தே.. ஆட்சிக்கு மட்டும்தான் ஆதரவு, நாங்கள் தனித்தே இயங்குவோம் என்று அறிவித்திருந்தன. தவெக ஆட்சிக்கு ஆதரவு இருக்கிறது.. அதே நேரம் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார்கள். இப்படி போட்டியிடுவதால், இது தவெகவுக்கு எதிரான நிலைப்பாடு என்றோ.. திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ கருத தேவையில்லை என்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.

    Advertisement

    ஏனெனில் இடைத்தேர்தல் என்பது, ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி கிடையாது. எனவே தனித்து போட்டியிடுவது அவர்களின் சுதந்திரம். இது எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    மக்களுடைய ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்தையும் நம்மால் அமல்படுத்த முடியாது. பரந்தூர் விமான நிலைய திட்டம் இதற்கான உதாரணம். இப்படி இருக்கையில் பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவது குறித்து முடிவெடுத்திருந்தாலும் மக்களுடைய கருத்தை தெரிந்துக்கொள்ளாமல் முடிவெடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Thirumavalavan: Amid Chief Minister Vijay's decision to construct a new Secretariat at Pattinapakkam—a move strongly opposed by Communist parties—remarks made by VCK leader Thirumavalavan have now drawn attention.