விசிக நிர்வாகி சங்கத்தமிழன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து! திருமாவளவன் அறிவிப்பு

  • சென்னை: விசிக நிர்வாகி சங்கத்தமிழன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கட்சியின் தலைவர் திருமாவளவன் ரத்து செய்து உத்தரவிட்டார். அதற்கான கடிதத்தை சங்கத்தமிழனுக்கு திருமாவளவன் நேரில் வழங்கினார்.

    Advertisement

    இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான இளஞ்சிருத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாநிலச் செயலாளர் சரவணன் என்ற சங்கத்தமிழன் கட்சியின் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து செயல்பட்டு வந்தமைக்காக அவர் மீது கடந்த ஜூன் 7 ஆம் தேதி அன்று ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து மேற்கண்ட சங்கத்தமிழன் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவையும் கட்சியின் தலைவரையும் நேரில் சந்தித்து விளக்கமளித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது விளக்கத்தை ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிசீலித்தது. அவரது விளக்கம் ஏற்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த நிலையில் சங்கத்தமிழன் கட்சி பணிகளில் வழக்கம் போல் ஈடுபட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உள்ளது.

    இதையடுத்து திருமாவளவனை நேரில் சந்தித்த சங்கத்தமிழன், அந்த ஒழுங்கு நடவடிக்கை ரத்துக்கான கடிதத்தை அவரிடமிருந்து பெற்று கொண்டார்.

    நடந்தது என்ன

    கடந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி முறிவுகள், உள்கட்சி பூசல்கள் உள்ளிட்டவை ஏற்பட்டன. விசிகவை பொருத்தமட்டில் திமுக கூட்டணியில் இருந்து படிப்படியாக விலகி தவெக பக்கம் சென்றுவிட்டது.

    Advertisement

    அமைச்சரவையில் இடம் பிடித்தாகிவிட்டது. இந்த நிலையில் விசிகவின் சங்கத்தமிழன் உள்கட்சி விவகாரத்தை பொது வெளியில் பேசியதால் மற்ற நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் சங்கத்தமிழன் மீது திருமாவளவன் ஒரு நடவடிக்கையை எடுத்தார்.

    இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பதிவிட்டுள்ளார். அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான 'இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை' என்னும் துணைநிலை அமைப்பின் மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    Advertisement

    கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து கட்சிக்குள்ளேயே பேசவேண்டிய முரண்களைப் பொதுவெளியில் பேசி, கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் தேவையற்ற நிர்வாக நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார் .

    தேர்தலுக்கு முன்பு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்' நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில், அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரப்பும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்போதும் கருத்து மாறுபாடுகளைக் கடந்து பேணவேண்டிய தோழமைக்கான மதிப்பீடுகளைச் சிதைக்கும் வகையில், ஊகமான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

    கட்சியின் நலன்களுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் குறித்து, கட்சியின் முன்னணி பொறுப்பாளர் என்கிற முறையில், அவருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி, உரிய நேரத்தில்- உரிய வகையில், 'கடிந்தும் -கண்டித்தும்' அறிவுறுத்தப்பட்டது. எனினும், அவரது நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றமும் இல்லை.

    Advertisement

    வாய்மை, நேர்மை என்னும் பெயரில் உட்கட்சி முரண்களை பொதுவெளியில் பேசுவது, கட்சியின் கட்டுக்கோப்பான வலிமையை அசைத்துப் பார்க்கும் ஆபத்தான முயற்சியாகும். அத்துடன், கட்சியைப் பின்பற்றி அரசியல் சக்தியாய் அணிதிரளும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் மிகவும் தீங்கான போக்காகும்.

    கட்சியை விட, கருத்தியலை விட, களம் காணும் மக்களைவிட, 'தானே முதன்மை' என தன்னை முன்னிறுத்தும் இத்தகையபோக்கு, ஒரு 'தவறான முன்மாதிரியாக' அமைந்து கட்சியிலுள்ள பிறரையும் இவ்வாறு செயல்படத் தூண்டுவதாக அமையும்.

    இந்நிலையில், கட்சியின் நலன்களைக் கருத்தில்கொண்டு பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள், "கட்சியிலிருந்து மூன்று மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்படுகிறார்." இந்த நடவடிக்கை தொடர்பாக இவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் விளக்கமளிக்கவும் அல்லது கட்சித் தலைமையிடம் மேல்முறையீடு செய்யவும் இவருக்கு உரிமையுண்டு.

    Advertisement

    இடைநீக்க காலத்தில் இவர் கட்சியின் விதிமுறைகளை மதித்து, மேலும் முரண்பாடான செயல்களில் ஈடுபடாமல், கட்சியின் கட்டுப்பாட்டைக் காப்பதன் மூலமே, இவரது மேல்முறையீடு ஏற்கப்பட்டு, இடைநீக்க நடவடிக்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

    ஒழுங்கு நடவடிக்கைக்குரிய காலத்தில் இவர் கட்சியின் நிகழ்வுகளில், போராட்டங்களில், கட்சி சார்ந்த இன்னபிற செயற்பாடுகளில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டியது இவரது இன்றியமையாத அரசியல் கடமையாகும். இவ்வாறு அந்த பதிவில் கூறியிருந்தார்.