MK Stalin: விசிக பங்களிப்பால்தான் திமுக 59 இடங்களில் வென்றது! திருமாவளவன் கடும் விமர்சனம்

  • சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பங்களிப்பால்தான் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 59 இடங்களில் வென்றுள்ளது என எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால் விசிகவின் வாக்குகள் தவெகவுக்கு சென்றதால்தான் திமுக தோல்வியுற்றதாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

    Advertisement

    சென்னை அசோக்நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் 500- க்கும் மேற்பட்டோர் விசிகவில் இணையும் விழா இன்று நடந்தது. இந்த விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    Advertisement

    அப்போது அவர் பேசுகையில், விசிகவின் பங்களிப்பால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 59 இடங்களில் வென்றது. இதை யாரும் சொல்லமாட்டார்கள். ஏன் சொல்லமாட்டார்கள் என்றால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    துணை முதல்வர், முதல்வர் என நாங்கள் சொல்லவில்லை. அவர்களாகவே சொல்லிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் எனக்கு நோபல் பரிசுக்கெல்லாம் பரிந்துரைக்கிறார்கள். நாங்கள் வைத்திருப்பது 2 சீட், இதை வைத்துக் கொண்டு நாங்கள் யாரிடமும் பதவி கேட்கவில்லை.

    நான் பாட்டுக்கு செவனேன்னு இருக்கிறேன். நம் கட்சியினரின் மூச்சுக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். கும்பலிலேயே 20 மணி நேரம் கிடக்கிறேன். ஆனால் எங்கோ இருப்பவர்கள் துணை முதல்வர், முதல்வர் என்கிறார்கள்.

    Advertisement

    ஏதோ நான் சொல்லித்தான் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இயக்குநரை நியமித்தார்கள் என்கிறார்கள். இப்படி தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அந்த அதிகாரி தலித் சமூகத்தினர் என்றால் நான் சொன்னேன் என்று அர்த்தமா?

    நான் 40 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். இதுவரை சாதி அடிப்படையில் எந்த அதிகாரிகளையும் நான் அணுகியது கிடையாது. இன்னும் சொல்ல போனால், நான் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கும் மேடையில் சொல்லியிருக்கிறேன். ஆடு, மாடு மேய்ப்பவர்களை நம்பி மட்டுமே இருக்கிறேன், ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளை நம்பி அல்ல என சொல்லியிருக்கிறேன்.

    இன்றும் கட்சி நடத்துவதற்கு சாதாரண உழைக்கும் தொண்டர்கள்தான் எனக்கு உதவுகிறார்களே தவிர ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் அல்ல! எனக்கென சிந்தனையாளர்கள் மன்றம் எல்லாம் கிடையாது. மருத்துவர் ராமதாஸ் நடத்தும் கட்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ்,. ஐபிஎஸ் அதிகாரிகள் போய் சேர்ந்துவிடுவார்கள். அவர்கள்தான் அக்கட்சிக்கு பட்ஜெட் எழுதி கொடுப்பார்கள், அறிக்கை எழுதி கொடுப்பார்கள்.

    Advertisement

    என் பின்னால் எந்த ஐஏஎஸ் அதிகாரியையாவது பார்த்துள்ளீர்களா, நானும் அவர்களை தேடி போனது கிடையாது. அவர்களும் என்னை தேடி வந்தது கிடையாது. நான் யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

    நான் மக்களுக்காக இருக்கிறேன், அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுகிறேன். என்னை நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள், "உங்களுக்கு முதல்வராகும் ஆசை இல்லையா" என்று! திருமாவளவனுக்கு முதல்வராக தகுதி இருப்பதாக மக்கள் கருதும் காலம் வரும், அதுவரை நான் மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நானும் குறி வைக்கப்படுவது உள்நோக்கம் கொண்ட செயல்! தமிழக அரசியலில் நாம் தொடர்ந்து பேசுப்படும் பொருளாக இருக்கிறார்கள்.

    Advertisement

    ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளைதான் விஜய் என விமர்சித்தீர்களே பிறகு எப்படி அவருடன் கூட்டணி அமைத்தீர்கள் என ஒருவர் என்னிடம் கேட்டார். அப்படியே திருப்பி கேட்கலாம்ல! நீங்கள் ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என திருமாவளவன் சொன்னாரே அவரிடம் ஏன் ஆதரவு கேட்டீர்கள் என விஜய்யை யாராவது கேட்டார்களா?

    திமுகவை தீயசக்தி என சொன்ன விஜய், எப்படி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு போகலாம், திமுகவை எதிர்த்துதானே உங்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். பிறகு எதன் அடிப்படையில் நீங்கள் அவர் வீட்டிற்கு சென்றீர்கள் என விஜய்யையும், வீட்டிற்கு வந்த விஜய்யை ஏன் வரவேற்றீர்கள் என்று ஸ்டாலினையும் யாராவது கேட்டார்களா? இவ்வாறு திருமாவளவன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    English Summary

    VCK president Thirumavalavan says that DMK won 59 seats in Assembly election because of VCK cadres support and hard work.