சென்னை: கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் வைத்தால் நானே அதை உடைப்பேன் என வெளிப்படையாக சொன்னவரோடு கொஞ்சி குலாவுகிறார்கள்.. கொஞ்சிக் கொள்கிறார்கள். பொது வேட்பாளராக வேற அவரை நிறுத்தப் போகிறார்களாம். ஆனால் இப்போது திருமாவளவன் எதிரி ஆகிவிட்டானாம்" என்று ஆதங்கத்துடன் திமுகவை விமர்சித்து பேசினார் தொல் திருமாவளவன்.
மேலும் பேசிய அவர் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருவதாகவும் இந்த கூட்டணியை 2009 இல் இருந்து பாதுகாத்தவன் நான் என்றும், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விசிக இடம்பெற்றதனாலேயே உலகம் எங்கும் வாழ்கின்ற உலகத் தமிழர்களால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதாகவும் திருமாவளவன் பேசினார். திருமாவளவன் பேசியதாவது:-
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் பேனா நினைவு சின்னம் வைத்தால் அதை உடைப்போம் என வெளிப்படையாக பேசக்கூடிய அளவுக்கு இங்கே உயர்ந்த அரசியல். இன்றைக்கு அவர்கள் ஒரே மேடையில், ஒரே நிகழ்ச்சியில், கொஞ்சி குலாவுகிறார்கள். கொஞ்சிக் கொள்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் இன்று விவாதம் ஆகவில்லை. கலைஞருக்கு நினைவு சின்னம் வைத்தால் அதை நானே உடைப்பேன் என்று சொன்னவர் யார் என்று உங்களுக்கு தெரியும்.. இப்போது அவரை பொது வேட்பாளராக நிற்க வைக்கப் போகிறார்களாம்.. ஆனால் திருமாவளவன் எதிரி ஆகிவிட்டானாம்.. அந்த கூட்டணியை 2009 இல் இருந்து பாதுகாத்தவன் இந்த திருமாவளன்.. திமுக காங்கிரஸ் கூட்டணியில் விசிக இடம்பெற்றதனாலேயே உலகம் எங்கும் வாழ்கின்ற உலகத் தமிழர்களால் கடுமையான விமர்சனங்களுகளுக்கு உள்ளானேன்.. பாவத்தை சுமந்தவன் இந்த திருமாவளவன்.. அன்றைக்கு, மருத்துவர் ராமதாஸ்.. அய்யா நெடுமாறன்.. வைகோ எல்லாரும் சேர்ந்து நீங்க ஒருவர் தான் திமுக கூட்டணியில் இருக்கிறீர்கள். நீங்கள் வெளியே வந்தீர்கள் என்றால் திமுகவை வீழ்த்திவிடலாம்.. ஒழித்துவிட முடியும் என்று என்னிடம் வெளிப்படையாக கூட்டாக சேர்ந்து சொன்னார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு திமுகவும் காங்கிரசும் தான் காரணம் என்று அவர்கள் பேசினார்கள். ஈழம் அரசியலை வெறும் தமிழ்நாட்டு தேர்தல் அரசியலோடு பொருத்தி பார்க்கக் கூடாது என்று சொன்னவன் இந்த திருமாவளவன். ஈழத்தில் நடக்கின்ற பெரும் அவலங்களுக்கு வெறும் தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. உலகளாவிய அரசியல். இதில் அமெரிக்காவுக்கு தொடர்பு உண்டு. ஏறத்தாழ 22, 23 நாடுகள் ஒன்று சேர்ந்து எல்.டி.டி.இ எனப்படும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்து ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இருந்தார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக அரசியல் லாபத்திற்காக இவை அனைத்திற்கும் கருணாநிதி தான் காரணம் என அவர் மீது பழி போட முயற்சித்த காலம் 2009.. இவ்வாறு திருமாவளவன் கூறினார். தேர்தல் முடிவுக்கு பிறகு தொல் திருமாவளவன் திமுக கூட்டணியில் நீடிப்பதாக சொல்லி வருகிறார். ஆனால் மற்றவர்கள் இதனை விமர்சிப்பதாகவும் பேசி வருகிறார். திமுக தான் விசிக எங்கள் கூட்டணியில் இல்லை என்று சொல்லி வருவதாகவும் நான் என்றைக்கும் சொல்லவில்லை எனவும் பேசி வந்தார். மேலும் திமுகவில் உள்ள சில விசிகவையும், தொல் திருமாவளவனையும் விமர்சித்து வருவதாகவும் கூறி வந்தார். இதற்கிடையே தான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சீமான் உடன் மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சிரித்து பேசியதையும், முன்பு சீமான் பேசியதையும் குறிப்பிட்டு திருமாவளவன் இவ்வாறு பேசியுள்ளார். திமுகவை விமர்சித்து பேசியவர்களிடம் கூட அருகில் அமர்ந்து சிரித்து பேசுவதாகவும், ஆனால் திமுக கூட்டணியை இவ்வளவு காலம் கட்டிக் காத்தவனை விமர்சிப்பதாகவும் என்ற தொனியில் பேசியுள்ளார்.இப்போது கொஞ்சி குலாவுகிறார்கள்..
கருணாநிதி மீது பழி போட முயற்சித்தனர்
திருமாவளவன் ஆதங்கம்