சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட இருப்பதாக பேச்சுகள் அடிபட்டன. ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார். இப்படி இருக்கையில் இன்று ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில், திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்றும், துணை முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
துணை முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்றும், திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை என்று திருமாவளவன் ஏற்கெனவே விளக்கமாக கூறிவிட்டார். இப்படி இருக்கையில் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக கூட்டணியில் இருந்த விசிக, தேர்தலுக்கு பிறகு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இதற்கு கைமாறாக விசிகவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருந்தார் விஜய். ஆனால், விசிகவின் ஆதரவு மட்டுமே தவெகவுக்கு போதவில்லை. தவெக தலைமையிலான கூட்டணியில் விசிக உள்ளிட்ட ஆதரவு கட்சிகள் இடம்பெற வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜய்யின் விருப்பம். இதற்காக திமுக கூட்டணியிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்று விசிகவிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், விசிக இது குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்து வந்தது. காரணம், விசிக தரப்பில் 3 முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்று திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிடுவது, இரண்டாவது அமைச்சரவையில் வழங்கப்பட்ட துறையை மாற்றி தருவது, மூன்றாவது வாரிய பதவிகள். இதற்கெல்லாம் ஓகே சொன்னால் திமுக கூட்டணியிலிருந்து விலக தயார் என்று விசிக டிமாண்ட் வைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், அப்படியெல்லாம் எந்த டிமாண்டையும் நாங்கள் வைக்கவில்லை என்று திருமாவளவன் விளக்கமளித்திருந்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தோழமைக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றிருந்தார். மறுபுறம் இன்று சேலம் ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்றும், துணை முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. திருச்சி கிழக்கில் போட்டியிட மாட்டேன் என்று திருமாவளவன் கூறிய நிலையில், தற்போது இது குறித்து அக்கட்சியினர் தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது, திமுக கூட்டணியிலிருந்து முழுமையாக விசிக வெளியேற ஓகே சொல்லிவிட்டதோ? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், அடுத்தடுத்த கட்சி கூட்டங்களில்.. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. பின்னர் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதே பாணியை விசிகவும் ஃபாலோ செய்கிறதா? என்கிற கேள்வி ஓமலூர் கூட்ட தீர்மானத்திற்கு பிறகு எழுந்திருக்கிறது. மட்டுமல்லாது, ஏற்கெனவே இது குறித்து விளக்கமளித்த திருமாவளவன்.. திருச்சி கிழக்கில் போட்டியிடும் ஐடியா இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனாலும், திருமாவளவன் கடந்த காலங்களில் அவர் பேசும் பேச்சுக்கும்.. செயலுக்கும் வேறுபட்டிருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு, தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் விஷயத்தில் இடதுசாரிகள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்களோ! அதே நிலைப்பாட்டை தொடருவோம் என்று திருமாவளவன் பேசியிருந்தார்.. ஆனால் கடைசியில் என்ன நடந்தது? இடதுசாரிகள் அமைச்சரவையில் பங்கெடுக்கவில்லை! விசிக பங்கெடுத்தது. திருச்சி கிழக்கு விஷயத்திலும் இப்படி நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.விஜய்யின் விருப்பம்
திருமாவளவனின் விளக்கம்
துணை முதல்வர் பதவி
திமுக பாணி
திருமாவளவன் பேச்சும்.. செயலும்