செங்கல்பட்டு: சட்டசபைத் தேர்தலுக்கு முன் தவெகவை ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புபடுத்தி விமர்சித்ததை தவறு என்று உணர்ந்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் விஜய் உறவாட விரும்பியதை பாராட்டுவதாக கூறிய திருமாவளவன், பாஜக உடன் கூட்டணியில் இருந்ததால் அதிமுக ஆதரவு தேவையில்லை என்று விஜய் முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெகவும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருந்தார். தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்த போதும் கூட இந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் 10 நாட்களுக்கு பின் தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றது. வன்னி அரசு சமூகநீதி துறை அமைச்சராகினார்.
தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்து 100வது நாளில் தவெக கூட்டணியில் விசிக இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், தவெகவை ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புபடுத்தி பேசினேன். விமர்சனம் செய்தேன்.. திமுகவை மட்டுமே குறி வைத்து விஜய் பேசுகிறார். ஒரு இடத்தில் கூட வேறு கட்சியை பற்றி பேசவில்லை. அதுவொரு வியூகம். நீயா, நானா என்ற நிலைப்பாடு அது.. ஆனாலும் பாஜகவை ஏன் விமர்சிக்கவில்லை என்ற நிலையில் இருந்து நான் சொன்ன விமர்சனம். அந்த விமர்சனம் தவறு என்று உணர்த்தக் கூடிய வகையில் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்படுத்தி கொண்ட உறவு.. காங்கிரஸ் கட்சியிடம் 5 உறுப்பினர்கள் தான் இருந்தனர். ஆனால் அதனை வைத்து ஆட்சி அமைக்க முடியாது. அதன்பின் விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்டுகள் ஆகியோருடன் தவெக ஆட்சி அமைத்தது. 4 கட்சிகளிடம் ஆதரவு கோருவதை விடவும், அதிமுகவிடம் ஆதரவு கோரினால் ஆட்சி அமைப்பது எளிது. ஆனால் அதிமுகவுடன் கை கோர்த்தால், அது பாஜகவுடன் அமைந்த கூட்டணி. அப்படியொரு ஆதரவு தேவையில்லை என்று தவெக முடிவு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நாடினார்கள். தனது பெயரை ஜோசப் விஜய் என்று அறிவித்ததும், காங்கிரஸ் கட்சியுடன் உறவாட விரும்புகிறோம் என்று அழைப்பு விடுத்ததும், மதச்சார்பின்மையில் விஜய்க்கு ஒரு உறுதிபாடு இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தியது என்று தெரிவித்துள்ளார். அதேபோல், கரூர் சம்பவத்தின் போது இதுவொரு விபத்து தான். அரசியலாக்க வேண்டாம் என்றேன் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.