முக ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ்.. திருமாவளவன் அப்செட்! தமிழக அரசுக்கு வைத்த டிமாண்ட்

  • சென்னை: மு.க ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு இசட் ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரின் எண்ணிக்கை 10-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுகவினர் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், "ஸ்டாலினுக்கு இதுவரையிலும் வழங்கப்பட்ட பாதுகாப்பு மீண்டும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்புக்கு பதிலாக இசட் பாதுகாப்பு அவருக்கு இனி வழங்கப்பட உள்ளது.

    Advertisement

    மு.க ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு

    சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் தோல்வி அடைந்ததால், அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பின் போது, தினமும் சுமார் 50 கமாண்டோ மற்றும் சிறப்புப் பிரிவு போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இசட் பிரிவாக குறைக்கப்பட்டு இருப்பதால், இனி ஸ்டாலினுக்கு 22 காவலர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    மு.க ஸ்டாலின் முதல்வர் பதவியை இழந்த நிலையில், அவருக்கான பாதுகாப்பு மறு ஆய்வு செய்யப்படுவது வழக்கமான நடைமுறை என்றே அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், பாதுகாப்பு குறைக்கப்பட்டதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் ஸடாலினின் வீட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டது.

    Advertisement

    திருமாவளவன் கருத்து

    ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் 4 நுழைவு வாயில்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பாதுகாப்பு இசட் பிரிவாக குறைக்கப்பட்டதும், ஸ்டாலின் வீட்டில் உள்ள 2 நுழைவு வாயில்கள் மட்டுமே பயன்பாட்டிற்காக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையும் 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு காவலர்கள் எண்ணிக்கையை குறைத்தது, திமுகவினர் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தவெக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். ஸ்டாலின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். விசிக தலைவர் தொல் திருமாவளவனும் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பாதுகாப்பு மீண்டும் வழங்க வேண்டும்

    செய்தியாளர்களிடம் பேசிய தொல் திருமாவளவன் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- "ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டது ஏற்புடையது இல்லை.. இதுவரையிலும் வழங்கப்பட்ட பாதுகாப்பு மீண்டும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    திமுக ஆட்சிக் காலத்தில் தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக சட்ட சபையில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த திருமாவளவன், "எதுவும் செய்யவில்லை என்று சொல்லவில்லை, அவர் அப்படி சொல்லவில்லை. ஒரு விஷயத்தை திரித்துப் பேசக்கூடாது" என்றார்.

    English Summary

    Thirumavalavan: The 'Z-plus' security cover previously provided to M.K. Stalin has been downgraded to 'Z' category. Amidst the resulting condemnation from DMK members, VCK leader Thirumavalavan has urged that the security previously provided to Stalin be restored, stating, "I request that the security provided to Stalin until now be reinstated; the Tamil Nadu government must make the necessary arrangements for this."