”தவெகவும் விசிகவும் இணைந்தே பயணிக்கும்” - உளுந்தூர்பேட்டை மாநாட்டில் திருமாவளவன் அறிவிப்பு!

  • கள்ளக்குறிச்சி: "தமிழக அரசியல் களத்தில் விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும். வருங்காலத்தில் விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும்." என விசிக தலைவர் திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்ற மாநாட்டில் பேசியுள்ளார்.

    Advertisement

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இன்று தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து விசிக நிர்வாகிகள், தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

    Advertisement

    இந்த மாநாட்டில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, "தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தி விசிக. விஜய் உடன் கூட்டணி வைத்துள்ளோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இனி கூட்டணிக் கட்சியாக மட்டும் சுருங்கிவிடாமல் இனி வருங்காலத்தில் விசிக தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும்.

    இதுநாள் வரை ஆளுங்கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்து வந்தோம். இனி தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக விசிக பரிணமிக்கும். நாம் தற்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். தமிழக அரசியல் களத்தில் விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்." எனப் பேசினார்.

    Advertisement

    மேலும், இந்த மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சாதியையும் சாதியை பாதுகாக்கும் மதவாதத்தை எதிர்த்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க இம்மாநாடு முன்மொழிகிறது. மதச்சார்பற்ற மொழி வழி தேசியத்தை கட்டியெழுப்பவும், தமிழ்நாட்டில் தமிழ் தேசிய எழுச்சியையும், நாட்டில் உள்ள மற்ற இனங்களிடையே நல்லிணக்கம், நட்புறவை வளர்த்தெடுக்க மாநாடு உறுதி எடுக்கிறது.

    இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம், மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தேசிய இனங்களுடன் கூடிய ஒன்றிய கூட்டாட்சியை உருவாக்க வேண்டும்.
    மாநில உரிமைகளைப் பறிக்கும் மையப்படுத்தப்படும் போக்கை தடுத்து அரசமைப்பின்படி கூட்டாட்சியை வலுப்படுத்த மாநாடு வலியுறுத்துகிறது.
    மாநில இன உரிமை, பொருளாதார உரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்கு மாநில சுய ஆட்சியை உறுதி செய்ய வேண்டும்.

    Advertisement

    கல்வி, பொருளாதாரம், கலை, நிர்வாகம், இலக்கியம், பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தும் அரசமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுக்கு வலியுறுத்தல். ஒரே தேசம், ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்ற ஆதிக்க அரசியலை நிராகரிக்க வேண்டும். சமத்துவ ஜனநாயக இந்தியாவை கட்டியெழுப்ப வேண்டும்.

    பிறமொழி, பிற இன மக்களை பகையாகக் கருதாமல், அனைத்து தேசிய இனங்களின் எழுச்சிக்கு அரசமைப்பு சட்டப்படி கூட்டாட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

    தொண்டர்கள் மேடையில் சூழ்ந்து கொண்ட நிலையில் நெரிசலுக்கு மத்தியில் மாநாட்டில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், "கட்டுக்கடங்காமல் அரங்கத்தில் உள்ள கூட்டத்தை விடவும் வெளியே லட்சக்கணக்கான சிறுத்தைகள் திரண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற வகையில் உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இந்த இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன்." எனக் கூறி உரையை முடித்துக்கொண்டார்.

    English Summary

    VCK leader Thirumavalavan stated at a conference held in Ulundurpet today that the VCK and TVK will travel together in the Tamil Nadu political arena from now on.