பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்!

  • சென்னை: அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த போது சிறப்பாக பணியாற்றினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்கினால், அவருக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவரின் ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைமையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருக்கிறார். அதற்கு முன்பாக வலுவான கட்டமைப்பை இயக்கத்தின் மூலமாக அண்ணாமலை கட்டமைக்க உள்ளார்.

    Advertisement

    அதற்காக அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். தமிழக பாஜகவினர் மட்டுமல்லாமல் அதிமுகவினரும் அண்ணாமலை பக்கம் சாய்ந்து வருகின்றனர். கட்சியின் பெயரோ, கொள்கையோ கூட சொல்லாமல் அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் இவ்வளவு பேர் இணைவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு ரஜினி ரசிகர்களின் ஆதரவும் இருக்கிறது. தமிழக மக்கள் எதிர்பார்க்கும் குரலில் தேசியக் கட்சிகள் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டை அண்ணாமலை முன் வைத்துள்ளார். அதேபோல் பாஜகவை எதிர்க்க வேண்டிய சூழல் வந்தால், நிச்சயம் எதிர்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்த நிலையில் காயிதே மில்லத் பிறந்தநாளையொட்டி அவருக்கு வீரவணக்கம் செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பேசுகையில், அண்ணாமலை அவர்கள் தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    அவர் ஏன் அந்தப் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார் அல்லது அவராக விலகினாரா என்பதற்கான உண்மையான கசப்பு என்னவென்று நமக்குத் தெரியவில்லை. எனவே, அதில் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. ஒருவேளை அண்ணாமலை ஊடகங்களில் பேசப்படுவது போலத் தனியாகப் புதிய அரசியல் கட்சி தொடங்கினால், அவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Thirumavalavan: VCK Chief Thirumavalavan Sends Best Wishes to Annamalai Amid a announcement of a New Political Party