திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறதா? பதிலளிக்காமல் எஸ்கேப்பான திருமாவளவன்!

  • சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம்பெற விசிக முடிவெடுத்துள்ள நிலையில், திமுக உடனான கூட்டணியில் தொடர்கிறதா என்ற கேள்விக்கு திருமாவளவன் பதிலளிக்க மறுத்துள்ளார். தமிழக அமைச்சரவையில் இடம்பெறுகிறோம் என்ற அறிவிப்பை மட்டுமே விசிக வெளியிடுவதாக கூறிய திருமாவளவன், மற்ற விஷயங்களை பின்னர் விரிவாக பேசலாம் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக அமைச்சரவையில் முதல்முறையாக விசிக இடம்பெறுகிறது. விசிக சார்பாக வன்னி அரசு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதன் மூலமாக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளை தொடர்ந்து விசிகவும் இணைந்துள்ளது.

    Advertisement

    நாளை காலை 9.30 மணிக்கு விசிகவின் வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்கின்றனர். இதனால் திமுக உடனான விசிகவின் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து திருமாவளவன் பேசுகையில், இன்றைக்கு அமைச்சரவையில் விசிக இடம்பெறுகிறது என்ற அறிவிப்பை மட்டும் வெளியிடுகிறோம்.

    மற்றவை தொடர்பாக அடுத்த சில நாட்களில் பேசலாம். அமைச்சரவையில் இடம்பெறுவது என்பது கட்சியின் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. மே 8ஆம் தேதி விசிக நடத்திய உயர்நிலைக் கூட்டத்திலும் கூட ஒரு சிலரை தவிர, அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார்கள். நிறைவாக என் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்ற நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

    Advertisement

    அதனையொட்டி தான் மே 9ஆம் தேதி ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். இறுதியாக வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். அதன்பின் ஆதரவு கடிதத்தை வழங்கினோம். ஆனாலும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இந்த சூழலில் தவெக தரப்பில் இருந்து வெளிப்படையான அழைப்பு வந்தது. அந்த அழைப்புக்கு பின் கட்சி நிர்வாகிகள் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெறுவதை பரிசீலிக்க வேண்டும் என்றனர். 1999லேயே விசிக தேர்தல் அரசியலில் களமிறங்கிய போது ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முன் வைத்தோம்.

    Advertisement

    தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி முறை அறிமுகமாகிறது. தவெக அழைப்பை கணக்கில் கொண்டு விசிகவின் நீண்ட கால கனவையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் எடுத்துள்ளனர். திமுக கூட்டணி தொடர்பாக நாளை அல்லது நாளை மறுநாள் அழைத்து பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Thirumavalavan: VCK Leader Thirumavalavan Refuses to Clarify VCK’s Future Ties with DMK after the power sharing with TVK