பாமக - தவெக உறவு.. விரும்பாத திருமாவளவன்.. திடீரென திமுக ஆதரவு டோனில் விசிக.. பின்னணி என்ன?

  • சென்னை: விசிகவுடன் நேரடியாக கூட்டணியில் இருந்து கொண்டே, பாமகவுடன் பின்வாசல் வழியாக தவெக உறவு கொண்டாடுவதை திருமாவளவன் ரசிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே எஸ்ஐஆர் விவகாரத்தில் ஸ்டாலின் மற்றும் திமுகவுக்கு ஆதரவாக திருமாவளவன் பேசி, தவெகவை சீண்டி வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்று இருக்கிறது. மதுராந்தகத்தில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வென்றதற்கு பாமகவின் வாக்குகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக அறிவித்துவிட்டாலும், நிர்வாகிகள் மூலமாக பாமக மறைமுகமாக தவெகவுக்கு உதவி இருக்கிறது.

    Advertisement

    பூத் வாரியாக பதிவான வாக்குகள் மூலம் இதனை புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல் அன்புமணிக்கும், செளமியா அன்புமணிக்கும் தவெக அமைச்சர்கள் அளிக்கும் முக்கியத்துவம், செளமியா அன்புமணியின் தந்தைக்கு தகைசால் தமிழர் விருதும் அளிக்கப்பட்டது. இதனால் தவெக கூட்டணியில் விரைவில் பாமக இணையும் என்று பார்க்கப்படுகிறது.

    ஆனால் பாமக கூட்டணிக்குள் வருவதை விசிக விரும்பவில்லை. தொடக்கத்தில் சின்னச் சின்ன நெருக்கம் இருந்ததை திருமாவளவன் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், தற்போது அமைச்சரவையில் இடம்பெறும் அளவுக்கு நெருக்கம் காட்டுவதை விரும்பவில்லை. விசிக உடன் கூட்டணி வைத்து கொண்டே, பாமகவுடன் உறவு கொண்டாடுவதை திருமாவளவன் ரசிக்கவில்லை.

    Advertisement

    இதன் காரணமாக தவெக ஸ்டைலிலேயே திருமாவளவன் பதிலடி கொடுத்து வருகிறார். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்றதற்கு எஸ்ஐஆர் தான் காரணம் என்று பேசியதன் மூலமாக, தவெகவினர் கொளத்தூர் கொத்து பரோட்டா பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். எஸ்ஐஆர்-க்கு திமுகவே காரணம் என்று தவெக பேசி வரும் சூழலில், எஸ்ஐஆர்-ஆல் பாதிக்கப்பட்டதே திமுக தான் என்று திருமாவளவன் அடித்து ஆடுகிறார்.

    இதனால் நாளுக்கு நாள் தவெக - விசிக இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. திருமாவளவன் சொல்லும் விஷயங்களை சரியாக செய்து கொடுத்து வரும் போதும், இப்படி தவெகவையே அட்டாக் செய்வது ஏன் என்று அமைச்சர்களும் புலம்ப தொடங்கி இருக்கிறார்கள். மறுபக்கம் விர்ச்சுவல் வாரியர்ஸ் மூலமாக விசிகவையும் சீண்ட தொடங்கி இருக்கிறது தவெக தலைமை. இதனால் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    English Summary

    Thirumavalavan: VCK Leader Thirumavalavan Unhappy With TVK's Backdoor Approach to PMK