சென்னை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கியிருந்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முக்கிய டிமாண்டையும் வைத்திருக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் வழக்கமாக தீப தூணில் ஏற்றப்படும். ஆனால், தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இதனையடுத்து இந்து அமைப்பை சேர்ந்த ராமசீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தார். சிக்கந்தர் தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் கல் தூண்தான் உண்மையான தீப தூண் என்றும், அதில்தான் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதற்கிடையில் பாஜகவின் எச்.ராஜா உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் மலையை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோம் என்று சபதம் எடுத்திருந்தனர். இப்படி இருக்கையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையும் தீபம் ஏற்ற கடந்த ஆட்சியில் உத்தரவிட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் தீபம் ஏற்ற முடியாது என்று திமுக அரசு உறுதியாக இருந்தது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் அதிகாரிகள் எதிர்கொண்டனர். இந்த சலசலப்புகளுக்கு இடையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. புதியதாக அமைந்த தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது? என்பது கேள்விக்குறியாக இருந்தது. இப்படி இருக்கையில்தான் தவெக அரசு தனது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது. "திருப்பரங்குன்றம் விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலைமை இருந்ததோ அதுவே தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். மக்கள் அமைதியைதான் விரும்புகிறார்கள். இதுதான் அரசின் கொள்கையும். இதில் எந்த மாறுபாடும் கிடையாது" என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருக்கிறார். அப்படியெனில் திமுக அரசின் நிலைப்பாடு இந்த ஆட்சியிலும் தொடரும் என்று கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், "திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்துக்கு இடம் கொடுக்காமல் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் குறித்து உறுதியான நிலையை அரசு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." என்று கூறியிருக்கிறார். தவெக அரசு மெஜாரிட்டி இல்லாமல் இருந்தபோது இடதுசாரிகளின் ஆதரவு தவெகவுக்கு தேவைப்பட்டது. எனவே, இடதுசாரி தலைவர்களை நிர்மல்குமார் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது, மதச்சார்பற்ற கொள்கைகளை அமல்படுத்துவதாக இருப்பின் தவெக அரசுக்கு இடதுசாரிகளின் ஆதரவு இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறியிருந்தனர். இதன் அடிப்படையில்தான் திருப்பரங்குன்றம் விஷயத்தில் முந்தைய அரசின் நிலைப்பாடே தொடரும் என்று நிர்மல்குமார் கூறியிருக்கிறார்.இந்து அமைப்புகளின் டிமாண்ட்
திமுக அரசின் உறுதி
தவெக அரசின் நிலைப்பாடு
சிபிஎம் வரவேற்பு
பின்னணி இதுதான்