மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தர்கா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
சுமார் 1,050 அடி உயரமுள்ள திருப்பரங்குன்றம் மலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், மலை உச்சி பகுதியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவ்லியா தர்காவும் அமைந்துள்ளன. தர்காவுக்கு அருகே காசி விஸ்வநாதர் கோயிலும், அதற்கு கீழே உச்சி பிள்ளையார் கோயிலும் உள்ளன. தற்போது கார்த்திகை தீபம் உச்சி பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில்தான் ஏற்றப்படுகிறது.
இந்த மலை 172.2 ஏக்கர் பரப்பளவில் பழங்கால சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள பகுதி தொடர்பாக 1923 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் நெல்லித்தோப்பு, மலைக்கு செல்லும் படிக்கட்டுகள், புதிய மண்டபம் மற்றும் மசூதியும் கொடிமரமும் அமைந்துள்ள மலை உச்சி பகுதி முழுவதற்கும் தர்காவே உரிமையாளர் என அறிவிக்கப்பட்டது. பின்னர் 1931 மே 12ஆம் தேதி ஐந்து நீதிபதிகள் கொண்ட பிரிவி கவுன்சிலும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதற்கிடையே மலை உச்சியில் அல்லது குதிரை சுனை அருகே தீபம் ஏற்ற கோரி தொடரப்பட்ட வழக்குகள் 2014, 2017ஆம் ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டன. குதிரை சுனையில் இதற்கு முன்பு எந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டதில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்த சூழலில் தான் கடந்த 2025 அக்டோபரில் ராம ரவிகுமார் என்பவர் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி மனு அளித்தார். கோயில் நிர்வாகம் பாரம்பரியமாக உச்சி பிள்ளையார் கோயில் அருகில்தான் தீபம் ஏற்றப்படுவதாக கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2025 டிசம்பர் 1ஆம் தேதி தனி நீதிபதி கல் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இதை எதிர்த்து தர்கா மற்றும் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வும் கல் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. 1920ஆம் ஆண்டு தீர்ப்பு தர்கா மற்றும் கொடிமரம் அமைந்துள்ள பகுதியை மட்டுமே விலக்கியுள்ளதாகவும், மலையின் எஞ்சிய பகுதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமானது என்றும் அமர்வு குறிப்பிட்டது. இருப்பினும், கடந்தாண்டு சில காரணங்களால் அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. இதற்கிடையே உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ள தர்கா நிர்வாகம், 1923ஆம் ஆண்டு சார்பு நீதிமன்றத் தீர்ப்பையும் 1931ஆம் ஆண்டு பிரிவி கவுன்சில் தீர்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளது. மசூதியும் கொடிமரமும் அமைந்துள்ள மலை உச்சிப் பகுதி முழுவதும் தர்காவுக்கு சொந்தமானது என்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் தவறாக சுருக்கியுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றும் 1862 மற்றும் 1912ஆம் ஆண்டுகளில் இதற்கான முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தர்கா தரப்பு தெரிவித்துள்ளது. தீபத்தூண் அமைந்துள்ள நிலத்தின் உரிமை குறித்து முறையான நில அளவீடு அல்லது எல்லை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் 1996ஆம் ஆண்டு தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட 15 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டுள்ளது. இதனால் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தர்கா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளது.திருப்பரங்குன்றம்
பின்னணி
மேல்முறையீடு
ஆதாரங்கள் இல்லை