திருவள்ளூரில் விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. ரூ.545 கட்டி நெல் பயிர் காப்பீடு.. ஆனால் ஒரு கண்டிஷன்

  • சென்னை: திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வெறும் ரூ.545 பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கான கடைசி தேதி நவம்பர் 15 என்பதால், விவசாயிகள் அதற்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும்., இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டரே பிரத்யேகமாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு 2026-ம் வருட சம்பா பருவ நெற்பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்படுத்துகிறது.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்

    இதன்படி, ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிருக்கு காப்பீட்டுக் கட்டணமாக ரூ.545 மட்டும் செலுத்தினால் போதும். நவம்பர் 15, 2026-க்குள் விவசாயிகள் தங்களது நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ச.கவிதா அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த வருடம் எல்-நினோ காலநிலை காரணமாக மழை பொழிவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் அதிக வெப்பம் காரணமாக நிலத்தடி நீர் குறையலாம்.. இன்னொரு பக்கம் சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சம்பா பருவத்தில் சாகுபடி

    இதனால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் வறட்சி ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்படலாம். அதேபோல், அதிகப்படியான மழையால் பயிர்கள் சேதமடையவும் வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டுதான் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    அப்படியானால் எப்படி காப்பீடு செய்வது? சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் எனப்படும் இ-சேவை மையங்களில் நேரடியாக காப்பீட்டுக் கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.

    காப்பீடு செய்வது எப்படி - ஆவணங்கள்?

    பதிவு செய்யும்போது நடப்பு பசலிக்கான அடங்கல், கணினி சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். காப்பீட்டுக் கட்டணம் செலுத்திய பிறகு அதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    Advertisement

    மேலும், பதிவு செய்த விவரங்களில் ஏதாவது தவறு இருக்கிறதா என்பதையும் விவசாயிகள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.. குறிப்பாக தங்களது பயிர் மற்றும் வங்கி தொடர்பான விவரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது முக்கியம்.

    எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், நவம்பர் 15-ம் தேதிக்குள் ரூ.545 காப்பீட்டுக் கட்டணத்தை செலுத்தி பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்புகொள்ளலாம்.

    English Summary

    Thiruvallur Farmers Important Announcement.. Pay Rs 545 For Crop Insurance.. But There’s One Condition