பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம்

  • சென்னை: திருவள்ளுவரை ஆளுநர் அர்லேகர் சனாதானி என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சொன்னவரை சனாதனி என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்? என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    நேற்று ஆளுநர் மாளிகையில், 'வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள்' என்கிற பெயரில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த படத்தில், வள்ளுவர் காவி நிற உடையில் இடம்பெற்றிருந்தார். இதற்கு திமுக, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இப்படி இருக்கையில் இந்த விழாவில் ஆளுநர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    ஆளுநரின் பேச்சு

    விருது வழங்கும் நிகழ்வுக்குப் பிறகு பேசிய ஆளுநர் அர்லேக்கர், திருவள்ளுவர் எந்த மாநில எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர் என்று குறிப்பிட்டார். அவர் எழுதிய திருக்குறளைப் படிக்கும்போது, அவர் எவ்வளவு பெரிய மாமனிதர் என்பது தெளிவாகப் புரியும் எனவும் ஆளுநர் கூறினார். நம் மண்ணில் வாழ்ந்த திருவள்ளுவர் போன்ற மாமனிதர்கள் அனைவரும் ஞானிகளும் கவிஞர்களும் ஆவர். அவர்களை நாம் பல பெயர்களில் அழைத்தாலும், அவர்கள் நமக்கு அளித்தவை கவிதை வடிவிலான ஒப்பற்ற அறிவுதான் என ஆளுநர் கூறியிருந்தார்.

    காவி உடை

    அவர் காவி உடை அணிந்திருந்தாரா அல்லது வெள்ளை உடுத்தினாரா என்பது முக்கியமல்ல. அவரின் நெற்றியில் திலகம் இருந்ததா இல்லையா என்பதும் பொருட்டல்ல. இந்த நாட்டிற்கு அவர் செய்த பங்களிப்பே மிகவும் முக்கியமானது என்று ஆளுநர் அழுத்தமாகத் தெரிவித்தார். சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட திருவள்ளுவர் முன் தலைவணங்கியே ஆக வேண்டும். அதுவே திருவள்ளுவரின் பெரும் சக்தி என்று ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கர் மீண்டும் வலியுறுத்தினார்.

    Advertisement

    கிருஷ்ணரின் அவதாரம்

    ஆபத்து வரும்போது அவதரிப்பேன் என்று கிருஷ்ணர் மொழிந்ததுபோல ஞானிகள் தோன்றுகிறார்கள். ஆதி சங்கராச்சாரியராகவும், ஞானேஸ்வராகவும், துளசிதாசராகவும் தோன்றியுள்ளனர். சில சமயங்களில் திருவள்ளுவராகவும் ஞானிகள் தோன்றியதாக அவர் விளக்கினார்.

    திருவள்ளுவர் போன்ற ஞானிகளின் வாழ்வின் ஒற்றை நோக்கம் மக்கள் நல்வாழ்வே. அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ, யுகத்திற்கோ உரியவர்கள் அல்ல. காலம் கடந்து எக்காலத்திற்கும் பொருத்தமானவர்கள் என ஆளுநர் கூறினார்.

    திருவள்ளுவர் சனாதனி

    திருவள்ளுவரின் போதனைகள் காலம் கடந்து நிற்கின்றன. எனவே, அவர் ஒரு சனாதனிதான். அப்படியிருக்க, அவரை சனாதனப் பாரம்பரியத்தின் சீடர் என்று அழைப்பதில் என்ன தவறு? அதுதான் உண்மை. இதை நம்மால் மறுக்க முடியாது என்று ஆளுநர் தனது உரையை நிறைவு செய்தார்.

    Advertisement

    இப்படி இருக்கையில், இவரது பேச்சுக்கு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என சமத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவரை சனாதனி என்று வரையறுக்கும் தமிழ்நாடு ஆளுநரின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது.

    எம்மதத்தையும் சாராத அவரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல். ஆளுநர் அர்லேகர் இச்செயலுக்காக தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Thiruvalluvar: Governor Arlekar had described Thiruvalluvar as a 'Sanatani.' Various quarters had expressed strong opposition to this. Against this backdrop, CPM State Secretary P. Shanmugam has raised the question: "How can it be correct to label the very person who proclaimed, 'All life is equal by birth,' as a Sanatani?"