வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்

  • சென்னை: ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் காவி நிற உடை அணிந்தவாறு காட்சிப்படுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தவெக கூட்டணியில் உள்ள கட்சிகளே இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்காமல் சென்றுள்ள சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நேற்று ஆளுநர் மாளிகையில், 'வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள்' என்கிற பெயரில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த படத்தில், வள்ளுவர் காவி நிற உடையில் இடம்பெற்றிருந்தார். இதுதான் சலசலப்புகளுக்கு காரணம்.

    Advertisement

    தமிழ்நாட்டை பொறுத்தவரை திருவள்ளுவரை வெள்ளை உடையில்தான் அனைவரும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஆனால், இந்துத்துவா அமைப்புகள்தான் காவி உடை கொண்ட திருவள்ளுவரை முதன்மைப்படுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில், ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் காவி திருவள்ளுவர் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

    மட்டுமல்லாது, திருவள்ளுவர் சனாதினி என்றும் ஆளுநர் கூறியிருந்தார். "திருவள்ளுவர் காவி உடை அணிந்திருந்தாரா அல்லது வெள்ளை உடுத்தினாரா என்பது முக்கியமல்ல. அவரின் நெற்றியில் திலகம் இருந்ததா இல்லையா என்பதும் பொருட்டல்ல. இந்த நாட்டிற்கு அவர் செய்த பங்களிப்பே மிகவும் முக்கியமானது. சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட திருவள்ளுவர் முன் தலைவணங்கியே ஆக வேண்டும். அதுவே திருவள்ளுவரின் பெரும் சக்தி.

    Advertisement

    ஆபத்து வரும்போது அவதரிப்பேன் என்று கிருஷ்ணர் மொழிந்ததுபோல ஞானிகள் தோன்றுகிறார்கள். ஆதி சங்கராச்சாரியராகவும், ஞானேஸ்வராகவும், துளசிதாசராகவும் தோன்றியுள்ளனர். சில சமயங்களில் திருவள்ளுவராகவும் ஞானிகள் தோன்றினர்.

    திருவள்ளுவர் போன்ற ஞானிகளின் வாழ்வின் ஒற்றை நோக்கம் மக்கள் நல்வாழ்வே. அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ, யுகத்திற்கோ உரியவர்கள் அல்ல. காலம் கடந்து எக்காலத்திற்கும் பொருத்தமானவர்கள்.

    திருவள்ளுவரின் போதனைகள் காலம் கடந்து நிற்கின்றன. எனவே, அவர் ஒரு சனாதனிதான். அப்படியிருக்க, அவரை சனாதனப் பாரம்பரியத்தின் சீடர் என்று அழைப்பதில் என்ன தவறு? அதுதான் உண்மை. இதை நம்மால் மறுக்க முடியாது" என்று ஆளுநர் கூறியிருந்தார்.

    Advertisement

    இதற்கு தவெக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளிக்காமல் அமைச்சர் கடந்து சென்றுவிட்டார். தவெக இந்த விவகாரங்களை இப்படித்தான் கையாள்கிறதோ? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    English Summary

    Thiruvalluvar: The incident involving the portrayal of Thiruvalluvar clad in saffron attire during an event held yesterday at the Governor's House has triggered widespread shockwaves. Even parties within the TVK alliance have expressed strong opposition to this incident. Against this backdrop, Minister Sengottaiyan’s refusal to respond when questioned by journalists regarding the matter has drawn criticism.