தோண்டப்படும் திருவேங்கடம் என்கவுன்டர்.. வலையில் அருண் IPS? திமுகவை சுற்றி வீசப்போகுதா புயல்

  • சென்னை: தமிழக அரசியல் களத்தில் இடைத்தேர்தலை தாண்டி இன்னொரு விவகாரம் இப்போது மெதுவாக சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது... சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகள் 2 பேர் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி போலீஸ் வட்டாரத்திலும் அரசியல் மட்டத்திலும் எழுந்துள்ளது.. இதுகுறித்து நமக்கு ஸ்பெஷல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது...!!

    Advertisement

    சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இரண்டு பேர் சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதற்கு காரணம், கிரானைட் தொழிலதிபருக்கு எதிரான போக்சோ பாலியல் குற்ற வழக்கின் பின்னணிதான் என தவெக அரசின் அதிகாரிகள் மட்டத்தில் சொல்லப்படுகிறது.

    Advertisement

    இடைத்தேர்தல் முடிந்ததும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் இருந்து வரும் சூழலில், அவர்கள் மீது எடுக்கப்பட்டும் கடுமையான நடவடிக்கை, ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை நிச்சயம் உருவாக்கிவிடும்.. எனவே அப்படிப்பட்ட நடவடிக்கை தவிர்க்கப்பட வேண்டும் என்று முதல்வர் தரப்புக்கு அழுத்தம் தரப்படுகிறது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.

    தோண்டப்படும் ஆம்ஸ்ட்ராங் கேஸ்

    இந்த நிலையில், சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஒருவருக்கு எதிராக மற்றொரு சம்பவம் ஆராயப்படுகிறதாம்.. இதுகுறித்துதான் நமக்கு பிரத்யேகமான தகவல் கிடைத்துள்ளது..

    அதாவது, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த திமுக ஆட்சியில் படு கொலை செய்யப்பட்டார். இதில் 10-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மிக முக்கியமானவர் திருவேங்கடம்... இவர்தான், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு திட்டமிட்டது யார்? அதிலுள்ள அரசியல் பின்னணிகள் என்ன? என்பது குறித்து பல தகவல்களை வாக்கு மூலமாக தந்திருந்தார்.

    Advertisement

    இந்த நிலையில், விசாரணைக்காகவும் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ள இடத்தை போலீசுக்கு காட்டவும் திருவேங்கடம் அழைத்து செல்லப்பட்டார். அப்போது போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார் திருவேங்கடம்... போலீஸ் வேனில் இருந்து குதித்து, தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி மூலம் போலீசாரை தாக்க அவர் முயற்சித்ததாகவும் , அதில் தற்காத்துக்கொள்ள போலீஸ் சுட்டதில் அவர் உயிரிழந்தார் என்றும் போலீஸ் தரப்பில் அப்போது விளக்கமளிக்கப்பட்டது.

    எப்படி கள்ளத்துப்பாக்கி?

    ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீஸ் வேனில் தான் சென்றார். அவரிடம் எப்படி கள்ளத் துப்பாக்கி இருந்திருக்க முடியும்? நீதிமன்ற காவலில் இருந்த அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்போது அவரை சோதித்துத்தான் வெளியே போலீஸ் அழைத்துச் செல்லும். அப்படியிருக்கும்போது, அவரிடம் எப்படி கள்ளத்துப்பாக்கி இருந்திருக்க முடியும்? என்றெல்லாம் அப்போதே சர்ச்சைகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.

    Advertisement

    உண்மையை மூடி மறைப்பதற்காக காவல் துறையினரே போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம், இப்போது விசாரணை சிறைவாசி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது என்றும், இது போலி என்கவுன்டர் என்றும் சீமான், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

    உருளுமா திமுக தலை

    இந்த சம்பவம் நடந்தபோது திமுக ஆட்சியில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் அருண் ஐ.பி.எஸ். ! தற்போது, அருணுக்கு எதிராக திருவேங்கடம் என்கவுண்டர் சம்பவத்தை தோண்ட தவெக அரசு திட்டமிடுகிறதாம்..

    Advertisement

    இடைத்தேர்தல் முடிந்ததும் திருவேங்கடம் என்கவுண்டர் விவகாரம் பூதாகரமாகும் என்று போலீஸ் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. மேலும், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருக்கும் நிலையில், இந்த என்கவுண்டர் விவகாரத்தை தவெக அரசு தோண்டும்போது திமுகவுக்கு எதிரான பல பூகம்பம் வெடிக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

    திமுக ஆட்சியில் நடந்த ஒரு பழைய என்கவுன்டர் இப்போது மீண்டும் தூசி தட்டப்படுவதால், இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் அடுத்த அதிர்வலை ஆம்ஸ்ட்ராங் வழக்கை மையமாக வைத்தே இருக்குமா என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்காக உள்ளது...!!

    - நமது சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Thiruvenkadam Encounter: Arun IPS in Trouble? Is a Storm Brewing Around DMK After the Bypoll?