மாட்டிறைச்சிக்கு தடையா?நான் எதை வேண்டுமானாலும் தின்பேன்! இவர் யாரு! சென்னையில் முஸ்லீம்கள் போராட்டம்


  • சென்னை: சென்னை திருவொற்றியூரில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டக் கூடாது என பாரத் முன்னணி அமைப்பினர் தெரிவித்ததை கண்டித்து ஆடு, மாடு இறைச்சிக் கடை வியாபாரிகளும் முஸ்லீம்களும் மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    சென்னை, திருவொற்றியூர் அருகே தாங்கல் பகுதியில் மாட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள சில கடைகளில் அனுமதியின்றி மாடுகளை வெட்டி இறைச்சிக்காக விற்கப்படுவதாக இந்து அமைப்பை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இறைச்சி விற்பனையாளர்களுக்கு ஆதரவாக முஸ்லீம் சமூகத்தினரும் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திருவொற்றியூர் போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    வாக்குவாதம் செய்த போது இந்து அமைப்பை சேர்ந்த சிலர் தங்களை இழிவாக பேசியதாகவும் மாட்டிறைச்சி விற்பனையை திட்டமிட்டு தடுக்க நினைப்பதாகவும் கூறி முஸ்லீம் மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள், திருவொற்றியூர் சாலையில் நேற்று இரவு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், மாடு, கன்றுக் குட்டிகளை வெட்டுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டே ஒரு முடிவை கூறிவிட்ட நிலையில் எங்களை மாடு வெட்டக் கூடாது என சொல்ல பாரத் இந்து அமைப்பை சேர்ந்த சிவாஜி யார்?

    Advertisement

    அந்த மாடு, கன்றுக்குட்டி மீதான மனிதாபிமானத்துடன் அவர் கேட்கவில்லை. இதை கேட்கவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. நான் மாட்டுக் கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி என எதை வேண்டுமானாலும் சாப்பிடுவேன். அதை சொல்ல இவர் யார்?

    ஆனால் நான் இதை சாப்பிடக் கூடாது, இதை வெட்டக் கூடாது என சொல்லும் அதிகாரம் அவருக்கு இல்லை. என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புபடிதான் நான் நடந்து கொள்ள வேண்டும்.

    பாரம்பரியமாக மாட்டுக் கறி விற்பனை செய்து வரும் கடைகளுக்கு சென்று இப்படி பிரச்சினை செய்வது ஏன்? இந்த பகுதியில் முஸ்லீம்கள், இந்துக்கள் என ஒற்றுமையாக இருக்கிறோம். அதில் பொது அமைதியை கெடுக்கவும் மத மோதல்களை தூண்டவும்தான் இவர் இப்படி ஒரு விஷயத்தை செய்து வருகிறார்.

    Advertisement

    நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எனவே பாரத் இந்து முன்னணியை சேர்ந்த சிவாஜியை கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். போலீஸாரும் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தனராம்.

    English Summary

    Chennai Thiruvotriyur people protest against Hindu front organisation for slaughtering cow.