புதுச்சேரி: தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும், நிர்வாகத்தில் குளறுபடிகள் தொடர்ந்து வண்ணம் உள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். சகோதரரை தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். இந்நிலையில் இந்த வழக்கில் அரசியல் பின்புலம் உள்ளது. பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்று மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தன் சகோதரர் மரிய குளோத், அவரின் மனைவி கெரோலின் ஆகியோரை வீடு புகுந்து தாக்கியதாக புகார் உள்ளது. இதுகுறித்து லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமைச்சர் மரிய வில்சன் இன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் கட்சிக்காரரான அமைச்சர் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராக கூடுதல் குற்ற பத்திரிகை மற்றும் பென் டிரைவரை பெற்று கொண்டார். 9.9.26 தேதி எதிர் தரப்பு கவுன்டர் நடைபெறவுள்ளது. இந்த சம்பவங்கள் எல்லாம் 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது. 2026 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்போது வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர் எம்எல்ஏ, மந்திரியான பிறகு தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் பின்னணி உள்ளது. அவர்களின் பின்னால் யாரோ இருந்து இயக்குவது போல அமைச்சர் உணர்கிறார். இது சம்பந்தமாக ஏற்கனவே நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதத்தை வைத்துவிட்டோம். எதிர்தரப்பு வாதத்தை பொறுத்து தேவையான நடவடிக்கை எடுப்போம். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது எங்கள் தரப்பு வாதமாகும். அமைச்சராவதற்கு முன்பு 3 முறை ஆஜராகியுள்ளார். அரசியல் காரணமாக தான் இப்போது இந்த வழக்கை வேகம் காட்டுகிறார்கள். இதன் பின்னணியில் யாரோ இருந்து இயக்குவது தெளிவாக தெரிகிறது. இந்த ஒரு வழக்கு மட்டுமே உள்ளது. குடும்பத்தில் நடந்த சிறு சம்பவத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குழந்தையை வளர்ப்பது தொடர்பான வழக்கில் தான் எல்லா பிரச்சனையும் உள்ளது. குழந்தையை திருப்பி அழைத்து வருவதற்காக சென்றபோது தான் பிரச்சனை செய்துள்ளனர். தனியாக வேறு வழக்குகள் இல்லை. இது பொய்யான வழக்கு. இதை புதுச்சேரி நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்போம். சமரச நீதிமன்றத்தில் அவர்களின் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதை எங்களால் நிறைவேற்ற முடியாது. 2022 ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்துக்கு எப்படி 2026 ஆம் ஆண்டு உயிர் பெற்றது. இதற்கு பின்புலம் இருக்கு. சில விஷயங்கள் நீதிமன்றத்தில் இருப்பதால் எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது. எங்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் வைத்துவிட்டோம். எங்களுக்கு நீதி கிடைகும் என்கிற நம்பிக்கை உள்ளது" என்றார்.அரசியல் காழ்ப்புணர்ச்சி
பின்னணியில் இயக்குவது யார்