புதுக்கோட்டை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தொடர் தோல்விகளை சந்திப்பதால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார்கள். அதிமுகவில் உள்ள பல முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தவெக மற்றும் திமுகவில் இணைந்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் இது முடிவு இல்லை. தொடக்கம் என தன்னுடைய அடுத்தகட்ட திட்டம் குறித்து அறிவித்துள்ளார்.
தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். இதனால் அவர்களின் பதவியை எடப்பாடி பறித்தார். வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடியிடம் சரண்டரானாலும், விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் எடப்பாடியை சந்திக்கவில்லை.
முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர் தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு முடிவு செய்வேன் என்று கூறியிருந்தார். அவர் அதிமுகவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். கடந்த சில நாட்களாக அவர் அதிமுக தலைமைக்கு எதிராக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இதனால் அவர் அதிமுகவில் இருந்து விலக போகிறார் என தகவல் வெளியானது. தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ இல்லை. அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு. உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை மக்களின் மனதை எப்படி வெல்லும். உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா என்று விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அவர் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதை சபாநாயகரும் ஏற்றுள்ளார். தொகுதி மக்களுக்கு விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ஆடியோவில், "வணக்கம். விராலிமலை மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் சொல்வதை போல இந்த விஜயபாஸ்கர் உங்கள் வீட்டு பிள்ளை. ஆயுள் உள்ள வரை உங்களுக்கு விசுவாசமாக நன்றியுடன் பணியாற்றுவேன். கடைசி வரை சேவை செய்வேன். மக்கள் முடிவு தான் என் முடிவு என்பதை நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். இது வெறும் முடிவு கிடையாது. இது ஒரு நல்ல தொடக்கம். என்னை வாழ்த்தி ஆசி வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.விஜயபாஸ்கர் ராஜினாமா
இது தொடக்கம்