அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம்

  • சென்னை: ''அதிமுகவை சேர்ந்த ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. சட்டசபையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் உடனடியாக அவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை தவெக ஊக்குவிப்பதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இந்த போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்லு'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தவெகவின் இந்த செயலுக்கு மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அந்த கட்சியின் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    Advertisement

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜினாமா செய்திருப்பதும், உடனடியாக அவர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருப்பதும் தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் அடுக்கடுக்கான குழப்பமும், கோஷ்டி மோதலும் ஏற்பட்டு ராஜினாமா என்ற நிலைக்கு வந்துள்ளது.

    ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

    Advertisement

    ஏற்கனவே, சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் உடனடியாக அவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை தவெக ஊக்குவிப்பதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும்.

    எனவே, இந்த போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது'' என்று கூறியுள்ளார்.முன்னதாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று நினைத்த அதிமுக தலைவர்களுக்கு இந்த தேர்தல் அதிர்ச்சியாக அமைந்தது. இந்த தேர்தல் தோல்வி என்பது அதிமுகவில் பிளவை ஏற்படுத்தியது. அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அதிமுகவில் 2 அணி உருவானது.

    Advertisement

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் 22 எம்எல்ஏக்களும், சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியில் 25 எம்எல்ஏக்களும் இருந்தனர். இதில் சிவி சண்முகம் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறினர்.

    அதுமட்டுமின்றி முதல்வர் விஜய் நம்பிக்கை கோரிய தீர்மானத்தில் சிவி
    சண்முகம் -எஸ்பி வேலுமணி அணியை சேர்ந்தவர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இந்த தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியும் அவர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

    Advertisement

    இதனால் 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் நேற்று அதிமுகவில் சிவி சண்முகம் -எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியில் இருந்தவர்களில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமர், தாராபுரம் எம்எல் சத்யபாமா ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர்.

    அதன்பிறகு இன்று அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இவர்கள் 4 பேரும் விஜய்யின் தவெகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    English Summary

    CPIM tamil Nadu Secretary Shanmugam says that, "Even if the resigned AIADMK MLAs claim that their decision to join the TVK was a voluntary choice, it cannot be viewed as a spontaneous act undertaken without any expectation of recompense. Nevertheless, by immediately inducting them into its fold, the TVK creates a situation where it appears to be actively encouraging such conduct. Therefore, this trend is incompatible with healthy politics,".