கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். மேடையிலும் பலர் ஏறிய நிலையில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் இப்போது ஆளும் தவெக அரசில் விசிகவும் பங்கேற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் இரு இடங்களில் வென்ற விசிகவுக்கு அமைச்சரவையில் ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராக இருக்கிறார். இதற்கிடையே விசிகவின் மாநாடு இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று பிரம்மாண்டமான "தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு" நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகாலை முதலே மாநாட்டுத் திடலில் குவியத் தொடங்கினர். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். மாநாட்டில் திருமாவளவன் தீபம் ஏந்தியபடி ரேம்ப் வாக் செய்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஏராளமான விசிக தொண்டர்கள் ரேம்ப் மீது ஏறியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், எப்படியோ சமாளித்து திருமாவளவன் மேடை ஏறினார். இந்த மாநாட்டில் மொத்தம் 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து திருமாவளவன் தனது உரையைத் தொடங்கினார். மாநாட்டில் பேசிய அவர், தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக விசிக உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ளோம் என கூறிய அவர், இனி விசிக வெறும் கூட்டணி கட்சியாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது. எதிர்காலத்தில் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக விசிக வளர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதாவது இதுவரை ஆளுங்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வந்த விசிக, இனி தமிழகத்தின் ஆளுங்கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், விசிகவும் தவெகவும் இணைந்து பயணிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் மிக பெரியளவில் கூட்டம் திரண்டது. மாநாட்டு திடலிலும் சரி, வெளியேயும் சரி கூட்டம் அதிகளவில் திரண்டது. இதன் காரணமாகவே திருமாவளவனும் கூட தனது பேச்சை சுருக்கமாக நிறைவு செய்தார். சில நிமிடங்கள் மட்டுமே தொண்டர்களிடையே பேசிய திருமாவளவன் கூட்டம் காரணமாக தனது பேச்சை பாதியிலேயே முடித்து கொள்வதாக குறிப்பிட்டார். மாநாட்டு திடலில் மட்டுமின்றி, மேடையிலும் கூட கூட்டம் அதிகமாக இருந்தது. பலரும் மேடை ஏறியதால் அதீத கூட்டம் இருந்தது. பாதியிலேயே பேச்சை முடித்து கொண்ட திருமாவளவன் கீழே இறங்க முற்பட்டபோது அவரும் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் திருமாவளவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேடையில் இருந்து இறங்கிய அவர் அங்கேயே சற்று நேரம் காத்திருந்தார். அவருக்கு அருகே இருந்த விசிக தொண்டர்கள் தண்ணீர் கொடுத்தனர். அதன் பிறகே திருமாவளவன், சிறிது நேரம் ஓய்வெடுத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மாநாடு
திருமாவளவன் பேச்சு
பாதியில் முடித்து கொண்ட திருமா
மூச்சுத்திணறல்