விஜயின் மெகா அரசியல் வேட்டை... மாமல்லபுரத்தில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

  • சென்னை: சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்களை அரங்கேற்றியுள்ளது. அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் திமுக மற்றும் தவெகவில் இணைந்து வருகிறார்கள். அந்த வரிசையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், 8 மாவட்ட செயலாளர்கள், 250க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    இதுகுறித்து சி.விஜயபாஸ்கர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நா.ன் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய 'கோவிட்' பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.

    Advertisement

    தவெகவில் இணைப்பு விழா

    நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கான மாபெரும் இணைப்பு விழா மகாபலிபுரத்தில் நடைபெற்றது. விஜயபாஸ்கருடன் மட்டுமே புதுக்கோட்டையில் இருந்து சுமார் 15,000 பேர் தவெகவில் இணைந்தனர். இதற்காக புதுக்கோட்டையில் இருந்து 200 பஸ்கள், 500 கார்களில் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் சென்னை வந்திருந்தனர்.

    Advertisement

    கரூர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிரம்மாண்டமாக தவெகவில் இணைந்தார். அதிமுகவில் திருப்பூர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்.

    காலியாகும் அதிமுக

    மேலும் அதிமுகவின் 10 முன்னாள் எம்எல்ஏக்கள், 8 மாவட்ட செயலாளர்கள், 250 பொதுக்குழு உறுப்பினர்களும் தவெகவில் இணைந்தனர். அவர்களுடன் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர். புதுக்கோட்டை, கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்தனர்.

    கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு தவெக துண்டு அணிவித்து வரவேற்றார். தவெக நிர்வாகிகளான என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலை வகித்தனர்.

    Advertisement

    இந்த நிகழ்வில், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி, திருப்பூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏக்கள் மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), எம். ராம்குமார் (கும்பகோணம்), ராஜவர்மன் (திருச்சுழி), சதன் பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி) உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

    மேலும், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பி.கே. வைரமுத்து, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இளம்பை தமிழ்செல்வன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ஒரத்தநாடு சேகர், திருச்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கட்சியில் இணைந்தனர்.

    English Summary

    Former AIADMK ministers C. Vijayabaskar, M.R. Vijayabaskar, and Valarmathi are set to officially join TVK today, marking a significant political development in Tamil Nadu.