அச்சுறுத்தும் உண்ணி காய்ச்சல்.. அறிகுறிகள் என்ன? பாதிப்பு வந்தால் என்ன செய்யனும்? சுகாதாரத்துறை அட்வைஸ்

  • சென்னை: தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. பருவமழை தொடங்கும் முன்பே டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், உண்ணி காய்ச்சல் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 17,000 பேர் டெங்கு காய்ச்சலிலும், 4,619 பேர் உண்ணி காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

    Advertisement

    உண்ணி காய்ச்சல் பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், உண்ணி காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு குறித்து பொதுசுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுசுகாதாரத் துறை காணொலி வெளியிட்டுள்ளது. அதில் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    Advertisement


    உண்ணி காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

    பருவநிலை மாற்றத்தாலும், வடகிழக்கு பருவமழை காரணங்களாலும் பல்வேறு வகையான நோய்கள் மக்களிடையே பரவலாக காணப்படுகின்றன. இதில் மக்களுக்கு தெரிந்த வியாதி டெங்கு காய்ச்சல் ஆகும். இதை தவிர்த்து ஒரு சில காய்ச்சல்கள் மக்களிடையே பரவி வருகிறது. இதில் ஒருவகையான காய்ச்சலாக 'ஸ்க்ரப் டைபஸ்' என்று அழைக்கப்படும் உண்ணி காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    சமீபமாக இந்த காய்ச்சல் மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது. இந்த 'ஸ்க்ரப் டைபஸ்' என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று. 'ரிக்கட்ஸியா' எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு, உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகையான பாக்டீரியாக்கள் புல் மற்றும் புதர்களில் ஒட்டுண்ணியாகவும், பூச்சியாகவும் வாழ்கிறது.

    Advertisement

    இது பொதுவாக காட்டுப்பகுதியில் வேலை பார்க்கும் பொதுமக்கள், தொழிலாளிகள் மற்றும் வயல்களில் வேலை பார்ப்பவர்களுக்குதான் ஒரு காலத்தில் பரவி வந்தது. ஆனால், தற்போது மக்கள் இடம் பெயர்வதாலும், பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக டாக்டர்களை அணுகி இதற்கான சிகிச்சையை பெற்று கொள்ள வேண்டும். இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    அறிகுறிகள் என்ன?

    டெங்கு காய்ச்சல் போலவே திடீரென அதிகமான ஒரு காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு சோர்வு, வரட்டு இருமல் வரலாம். தலைவலி அதிகமாக வரும். திடீர் காய்ச்சல் அதிகரிக்கும். 4 மணிக்கு காய்ச்சல் இல்லாமல் இருப்பார். 4.15 மணிக்கு அதிக காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட டெங்கு மாதிரியே இருக்கும். ஆனால் தலைவலி அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூச்சி கடித்த இடத்தின் அருகில் நிணநீர் கட்டிகள் இருக்கலாம். சின்ன பூச்சி கடித்த சிரங்குகள் இருக்கலாம். இதெல்லாம்தான் அறிகுறிகள்.

    Advertisement

    காய்ச்சல் வந்தாலே மருந்தகங்களில் போய் மருந்துகள் வாங்கி 4-5 நாட்கள் கழித்துதான் மருத்துவமனை வருகிறார்கள். காய்ச்சல் திடீரென அதிகமாக வந்து உடல்வலி, தலைவலியோடு வந்தால் உடனடியாக எந்த அரசு மருத்துவமனைக்கும் வரலாம். மருத்துவர்கள் உடனடியாக மருந்துகள் தந்தால் முற்றிலும் குணமாக்கக் கூடிய ஒரு வாய்ப்பு உள்ளது.

    English Summary

    Tick ​​fever: Amidst the resulting public alarm and concern, cases of tick fever have also begun to rise. Minister Arunraj stated that, so far, 17,000 people in Tamil Nadu have been affected by Dengue fever and 4,619 by tick fever. As the threat of tick fever looms, the Department of Public Health has issued an advisory to raise awareness about the symptoms of the disease and necessary precautionary measures.