தூத்துக்குடி: நாடாளுமன்ற எம்பி திருச்சி சிவா விரைவில் மத்திய அமைச்சர் ஆவார் என்றும், அடுத்த 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுக சார்பில் திருச்செந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
இன்று முதல்வராக இருக்கக் கூடிய விஜய் அவர்கள், இந்த நாட்டு மக்களுக்கு எதாவது செய்தார் என்று யாராவது சொல்ல முடியுமா? எவருக்காவது உதவி செய்தார் என்று சொல்ல முடியுமா. ஏழை மக்களுக்கு உதவி செய்தார். பெண்களுக்கு உதவி செய்தார். தொழிலாளர்களுக்கு உதவி செய்தார் என சொல்ல முடியுமா? எந்த வகையில் அவர் முதலமைச்சராக வந்தார்.
அவர் எம்.ஜி.ஆரை பின்பற்றினார் என்கிறார்கள். எம்.ஜி.ஆரும் விஜய்யும் ஒன்னா.. இன்னும் 6 மாத காலத்தில் தமிழகத்தின் முதல்வராக மு.க ஸ்டாலின் அவர்கள் வருவார். நம்முடைய இளம் தலைமுறை கட்சியை நடத்துவார்கள் அண்ணன் உதயநிதி ஸ்டாலின். நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர்கள் டெல்லியில் அமைச்சர்களாக அமர்வார்கள்.. என்று கூறினார். தமிழகத்தில் ஆளும் தவெக அரசை மிகக்கடுமையாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்து வருகிறார். குறிப்பாக விஜய்யை சரமாரியாக தாக்கி பேசும் அனிதா ராதாகிருஷ்ணன், தவெக ஆட்சி 6 மாதத்தில் கவிழும் என்று பேசியிருப்பதோடு மட்டும் நிற்காமல் 6 மாதத்தில் திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆவார் என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. மத்தியில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அனிதா ராதாகிருஷ்னண் பேசியிருப்பது, பாஜக பக்கம் திமுக நகரக்கூடும் என்பதையே இப்படி மறைமுகமாக அனிதா கூறுகிறராரா என்று அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.