திருத்தணி பொக்லைன் டிரைவருக்கு ரூ.62 லட்சம் GST பாக்கி.. வங்கி கணக்கும் முடக்கம்.. யார் செய்த வேலை?

  • சென்னை: குறைந்த வருமானம் கொண்டவர்களின் பேங்க் அக்கவுண்ட்டுகளில், கோடிக்கணக்கில் வரி பாக்கி உள்ளதாக செய்திகள் வெளியாவது பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. குறைந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்தும் ஏழைய, எளிய மக்களுக்கு, இந்த ஜிஎஸ்டி வரி பாக்கியானது மிகப்பெரிய சுமையை தலையில் இடி போல் விழ செய்துள்ளது.. என்ன நடந்தது திருத்தணியில்?

    Advertisement

    சமீப காலமாகவே ஆவண மோசடிகள் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கூலித் தொழிலாளர்களின் அடையாள ஆவணங்களை திருடி, அவர்களுடைய பெயர்களில் போலியான நிறுவனங்களை பதிவு செய்து, ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக காட்டி மோசடிகள் செய்யும் கும்பல்கள் அதிகரித்துவிட்டன.

    Advertisement

    ஜிஎஸ்டி வரி பாக்கி

    இதுபோன்ற மோசடிகளுக்கு பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட, ஏழை மக்களே பாதிக்கப்படுகிறார்கள்... அவர்கள் தங்களுக்கான நியாயம் கேட்டு அதிகாரிகளிடம் சென்றால்கூட, முறையாக நடவடிக்கை எடுக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்களாம்.. எனவேதான், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இந்த மோசடிகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும், பாதிக்கப்பட்டோருக்கு விரைவாக நீதி வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதோ மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் திருத்தணியில் நடந்துள்ளது.. வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியாமல் முடக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான காரணத்தை தெரிந்துகொண்ட பொக்லைன் டிரைவர் முரளிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு ரூ.62 லட்சம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்திருப்பதும் தெரியவந்தது. இதனால் அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. .

    Advertisement

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள மைலார்வாடா முல்லிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. 50 வயதான இவர் பொக்லைன் டிரைவராக வேலை செய்து வருகிறார். அந்த வருமானத்தைக் கொண்டுதான் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளை கவனித்து வருகிறார்.

    ஜிஎஸ்டி டின் எண் - வங்கி சேமிப்பு கணக்கு

    முரளி, எரும்பியில் உள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பே திடீரென முடக்கப்பட்டது. தனது கணக்கு ஏன் முடக்கப்பட்டது என்பது தெரியாமல், வங்கி கிளை மேலாளரிடம் முரளி பலமுறை புகார் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அப்போது வங்கி தரப்பில் சொல்லப்பட்ட தகவல் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முரளியின் வங்கி கணக்கு விவரங்களை பயன்படுத்தி, லட்சுமி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி டின் எண் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்தியன் வங்கி

    அதுமட்டுமின்றி, அந்த நிறுவனத்தின் பெயரில் ரூ.62 லட்சம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த வரியை செலுத்த வேண்டும் என்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர், எரும்பி இந்தியன் வங்கிக்கு கடிதம் அனுப்பியிருந்ததாகவும், அதன் அடிப்படையில்தான் முரளியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாகவும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    பொக்லைன் ஓட்டி குடும்பத்தை நடத்தி வரும் தனது வங்கி கணக்கு விவரங்களை யாரோ பயன்படுத்தி போலியாக நிறுவனம் தொடங்கி, அதன்மூலம் ஜிஎஸ்டி டின் எண் பெற்றிருப்பது முரளிக்கு தெரியவந்தது. தான் செய்யாத தொழிலுக்காக ரூ.62 லட்சம் வரி செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால், முரளியும் அவரது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    கோட்டாட்சியர் ராஜகோபால்

    இதையடுத்து தனது வங்கி கணக்கு பெயரை பயன்படுத்தி போலியாக நிறுவனம் தொடங்கப்பட்டு ஜிஎஸ்டி டின் எண் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, திருத்தணி கோட்டாட்சியர் ராஜகோபாலை நேற்று முரளி நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

    Advertisement

    இந்த விவகாரம் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.. ரூ.62 லட்சம் ஜிஎஸ்டி வரி தொடர்பான பிரச்சினையை திருவள்ளூரில் உள்ள எல்டி வங்கி மேலாளர் மற்றும் ஜிஎஸ்டி ஆணையரின் பார்வைக்கு கொண்டு சென்று, முரளியின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    English Summary

    Tiruttani Poor Excavator Driver Faces ₹62 Lakh GST Tax Dues.. Bank Account Frozen.. Who Did This?