அதிகாரிகள் எழுதி கொடுத்ததை அப்படியே படித்து சிக்கி கொண்ட அமைச்சர் விக்னேஷ்.. என்ன நடந்தது?

  • சென்னை: டாஸ்மாக் மதுபான கடை இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் எழுதி கொடுத்ததை அப்படியே வாசித்து அமைச்சர் விக்னேஷ் மாட்டிக் கொண்டுள்ளார். இதனால் அதிகாரிகள் கொடுக்கும் ஆவணங்களை அமைச்சர்கள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பலரும் அறிவுறுத்த தொடங்கி இருக்கின்றனர்.

    Advertisement

    சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பேசுகையில், செஞ்சி வட்டம், ஜம்போதி கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடை, நிலைப்பிரச்சனை மற்றும் வாடகை பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை அடிப்படையில் திண்டிவனம் வட்டம் நடுவனந்தல் கிராம எல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    Advertisement

    அந்த கடைக்கு அருகில் 1.5 கிமீ தொலைவிற்கு குடியிருப்புகளே இல்லை. அதேபோல் கோயில், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசுகையில், அமைச்சர் விக்னேஷ் சொல்லி இருக்கும் பதில் ஏற்புடையது அல்ல. அது தவறான பதில். அது என்னுடைய மயிலம் தொகுதி.. முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்த பகுதியாகும்.

    ஒரு பேரூராட்சி கூட இல்லாத தொகுதி. விவசாயிகள் நிறைந்த பகுதி.. நீங்கள் சொல்லும் செஞ்சி நகரத்திற்கு அருகில் உள்ள ஜம்போதி கிராமத்தில் மூடப்பட்ட கடையை 25 கிமீ தாண்டி, திண்டிவனம் நகரத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள நடுவனந்தல் எல்லையில் நேற்று திறந்துள்ளனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், யாருக்கும் தெரியாமல், கடை எண் கூட இல்லாமல் நேற்று திறந்துள்ளனர்.

    Advertisement

    சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 80 ஆண்டுகளாக எந்தவித மதுக்கடைகளும் இருந்ததில்லை. நகரத்தில் இருந்து மாற்றி வந்து கிராமத்தில் டாஸ்மாக் கடையை வைக்க வேண்டிய அவசியம் என்ன? பக்கத்தில் கோயில்கள் உள்ளது. அந்த நடுவனந்தல் கிராமம் வழியாக தான் தீவனூர், காட்டுச்சிவிரி, நடுவனந்தல் புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர்.

    மாவட்டச் ஆட்சித் தலைவர் உங்களுக்கு கொடுத்திருக்கும் தகவல் உண்மைக்கு மாறான தகவல். இதனால் உடனடியாக ஆய்வு செய்து அந்த மதுக்கடையை மூட வேண்டும். அதுமட்டுமல்லாமல் நேற்று மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களை இரவு 8 மணி வரை காவல் நிலையத்தில் வைத்துவிட்டு தான் விட்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

    Advertisement

    இதன்பின் அமைச்சர் விக்னேஷ் எழுந்து, மாவட்ட ஆட்சியரின் சொல்படிதான் இந்த தகவல் அளித்தேன். எம்எல்ஏ-க்களின் கருத்துகளை ஆய்வு செய்து, அங்கு தவறு இருப்பின் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும். அதேபோல் 717 கடைகளை மூடி இருக்கிறோம். அதன் விவரங்களை முழு முகவரியுடன் வெளியிடுவோம். நிச்சயமாக அடுத்த முறை கடைகளை மூட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    இதன் மூலமாக அதிகாரிகள் கொடுக்கும் தகவலை எந்தவித ஆய்வும் செய்யாமல் அமைச்சர்கள் அப்படியே சட்டசபையில் பதிலாக சொல்லி வருவது தெரிய வந்துள்ளது. வரும் காலங்களில் அதிகாரிகள் எழுதி கொடுக்கும் பதிலை கொஞ்சம் சோதனை செய்த பின் அமைச்சர்கள் முடிவு எடுத்து பேச வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

    English Summary

    TN Assembly: Minister Vignesh Facing Backlash After Reading Flawed TASMAC Relocation Document Provided by Officials