சட்டசபையில் முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமா?.. காரசார விவாதம்.. சபாநாயகர் கொடுத்த விளக்கம்

  • சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமா? என்ற கேள்வி இன்று சட்டசபையில் விவாதமாக எழுந்தது. இதையடுத்து, 'சட்டப்பேரவையில் முதல்வர் வரும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்பது கட்டாயமில்லை. அது அவரவர் உரிமை' என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், 'முதல்வர் விஜய் அவைக்குள் வரும்போது எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்ற கண்ணியத்தை எதிர்க்கட்சி தலைவருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்றார்.

    Advertisement

    உடனே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எழுந்து, "எதிர்க்கட்சித் தலைவரை பற்றி அமைச்சர் சொல்கிறார். திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எங்கள் தலைவர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்தது இல்லை. எனவே அது ஒரு குற்றம் இல்லை. அது அவரவர் எண்ணம். எதிர்க்கட்சித் தலைவருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என சொல்லி பேசுவதெல்லாம் தேவையற்றது" என்றார்.

    இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "பேரவைத் தலைவர் வரும்போது கட்சி வித்தியாசமின்றி அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்பது காலம் காலமாக கடைபிடிக்கும் மரபு. முதல்வராக இருப்பவர்கள் நேராக தங்கள் இருக்கைக்கு சென்று வணக்கம் செலுத்திவிட்டு, அமர்வதுதான் மரபு.

    Advertisement

    ஆனால், முதல்வர் விஜய் அவைக்குள் நடந்து சென்று அங்கும் இங்கும் திரும்பி வணக்கம் செலுத்திவிட்டு, அமர்கிறார். இது புதிய பழக்கமாக உள்ளது. இப்படி, புதிய மரபாக முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமெனில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நிற்க வேண்டுமா என்பதை பேரவைத் தலைவர் முடிவு செய்ய வேண்டும்" என கேள்வி எழுப்பினார்.

    இதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில்,"முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வரும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த அவையின் கண்ணியமும், மிகச் சிறந்த பாரம்பரியமும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மரியாதை தெரிவித்துக் கொள்வதுதான். அந்த அடிப்படையில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வரும்போது மரியாதை தெரிவிப்பது தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம்.

    Advertisement

    அந்த கண்ணியத்தை காப்பாற்ற வேண்டுமா வேண்டாமா என்பதை அவரவர்க விருப்பத்துக்கே விட்டுவிடுகிறேன். அதை செய்தாக வேண்டும் என கட்டாயபப்டுத்த முடியாது. அவரவருக்கு கொடுக்கும் மரியாதையை, தங்களின் மனதுக்கு ஏற்ப கொடுப்பது அவரவரின் உரிமை.

    சட்டசபை கூடுவதற்கு முன்பாக சட்டசபைக்குள் முதலமைச்சர் வந்த போது எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்று மரியாதை செலுத்தியதை பார்த்திருக்கிறேன். இந்த அவையின் கண்ணியமும், பாரம்பரியமும் காக்கப்படும்படி, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்திக் கொள்வது நம் பண்பாடு." எனத் தெரிவித்தார்.

    முன்னதாக, தவெக அரசு 100 நாட்களை நிறைவு செய்திருப்பது தொடர்பாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், "மதச்சார்பற்ற, சமூக நீதி காக்கும் முதல்வர் விஜய்யின் பொற்கால அரசு பொறுப்பேற்று 100 நாட்களை கம்பீரமாக நிறைவு செய்துள்ளது. அரசின் இந்த முதல் 100 நாட்கள் என்பது நாட்காட்டியில் கடந்து செல்லும் நாட்கள் அல்ல, தமிழக வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு வரலாற்று மாற்றம்.

    Advertisement

    வாக்குறுதி என்பது தேர்தலுக்கான வார்த்தை அல்ல. அது மக்களுக்கான பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படும் இந்த அரசு, முதல் நாளிலிருந்து மக்களின் நாடித் துடிப்பு அறிந்து, புதிய சிந்தனையுடன் களமிறங்கி முதல் 100 நாட்கள் பல்வேறு துறைகளில் செயல்படுத்திய பணிகள் பாராட்டுக்குரியவை." என்றார்.

    English Summary

    The question of whether members must stand up when the Chief Minister enters the Assembly arose as a topic of debate today. In response, Speaker JCD Prabhakar stated, "It is not mandatory for members to stand up when the Chief Minister enters the Assembly; it is a matter of individual choice."