2 தொகுதி இடைத்தேர்தல்.. அன்புமணிக்கு வலைவீசும் திமுக, அதிமுக! பாமக யாருக்கு ஆதரவு?

  • சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் தொடங்கி தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள வேளையில், மதுராந்தகம் தொகுதியைத் தங்களது வசமாக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளும் முழு மூச்சாகக் களமிறங்கியுள்ளன.

    Advertisement

    இந்த அரசியல் மோதலின் மையப்புள்ளியாக பாட்டாளி மக்கள் கட்சியும், அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் மாறியுள்ளனர். இரு கட்சிகளின் தலைமையும் பாமகவின் ஆதரவைப் பெற அன்புமணிக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்து வருகின்றன.

    Advertisement

    மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை, அங்கு வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக வன்னியர் மற்றும் பட்டியலின சமூக மக்களின் வாக்குகள் விளங்குகின்றன. கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் வலுவாக இருந்த பட்டியலின மக்களின் முக்கிய கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போதைய அரசியல் சூழலில் ஆளும் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக, தொகுதியில் கணிசமாக உள்ள பட்டியலின மக்களின் வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உருவாகியுள்ளன.

    இத்தகைய சூழலில், மற்றொரு பிரதான சமூகமான வன்னியர்களின் வாக்குகளைக் கையில் வைத்திருக்கும் பாமகவின் ஆதரவு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டு விலகியிருந்தது. எனினும், கடந்த பொதுத்தேர்தலில் வட தமிழகத்தில் அதிமுக கணிசமான இடங்களைக் கைப்பற்றியதற்குப் பாமகவின் அடிமட்ட பலமும் வாக்குகளும் தான் பிரதான காரணம் என்பதை அதிமுக தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

    Advertisement

    இதனால், மதுராந்தகத்தில் வெற்றி பெற வேண்டுமானால் பாமகவின் ஆதரவை நாம் கண்டிப்பாகப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுகவின் வன்னியர் சமூக முக்கிய நிர்வாகிகள் (சி.வி. சண்முகம் தவிர்த்து) தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். கட்சியின் சீனியர்களின் கோரிக்கையை ஏற்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக டாக்டர் அன்புமணியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால், அதற்கு அன்புமணி உடனே பிடி கொடுக்கவில்லை. "அவசரப்பட்டு எந்த முடிவையும் நான் உடனடியாக எடுக்க முடியாது. கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் விரிவாகப் பேசிவிட்டு எனது முடிவைச் சொல்கிறேன்" என்று மிகவும் பட்டும்படாமல் பதிலளித்துவிட்டதாகத் தெரிகிறது.

    Advertisement

    அன்புமணியின் இந்த மதில்மேல் பூனை நிலைப்பாட்டை அதிமுகவின் மூத்த நிர்வாகிகளிடம் பகிர்ந்த எடப்பாடி பழனிசாமி, "பாமக இந்த இடைத்தேர்தலில் நம்மை ஆதரிக்கும் என்று உறுதியாகத் தெரியவில்லை; பெரும்பாலும் தனித்துப் போட்டியிடவே வாய்ப்புள்ளது போலத் தோன்றுகிறது. எனவே எந்தக் கடினமான சூழலையும் நாமே எதிர்கொள்ளும் வகையில் மாற்று வழிகளைத் தயார் செய்யுங்கள்" என்று தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

    அதிமுக ஒருபுறம் காய்நகர்த்திக்கொண்டிருக்க, மறுபுறம் திமுக தலைமையும் பாமகவின் ஆதரவை எப்படியாவது வளைத்துப் போடத் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. வன்னியர் சமுதாய வாக்குகளைக் குறிவைத்து, பாமக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை மூத்த அமைச்சர்களான துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்டச் செயலாளர் சுந்தர் ஆகியோரிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார்.

    Advertisement

    அதன்படி, முதல் கட்டமாக அன்புமணியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் மா.செ. சுந்தர். ஆனால், அதிமுகவிற்கு என்ன பதிலை அன்புமணி சொன்னாரோ, அதே பாணியிலான பதிலைத்தான் திமுக தரப்பிடமும் அவர் தெரிவித்துள்ளார். "நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகே முடிவு" என்று கூறி இரு கட்சிகளுக்குமே பாமக தலைமை சஸ்பென்ஸ் வைத்துள்ளது.

    தற்போதைய கள நிலவரப்படி, இரு கூட்டணிகளிலுமே வாக்குகள் சிதறும் நிலை இருப்பதால், பாமகவின் வாக்கு வங்கி இல்லாமல் மதுராந்தகத்தில் எந்த ஒரு கட்சியும் எளிதில் வெற்றி பெற முடியாது என்ற உறுதியான முடிவில் பாமக நிர்வாகிகள் விவாதித்து வருகின்றனர். அன்புமணி எடுக்கும் ஒற்றை முடிவுதான் மதுராந்தகம் இடைத்தேர்தலின் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் திசையாக அமையப்போகிறது என்பதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பாமகவின் அடுத்த கட்ட நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    TN Bypolls 2026: DMK and AIADMK to woo PMK chief Anbumani Ramadoss for Madurantakam seat