மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா?

  • தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், ஜூன் 10ஆம் தேதியான இன்று சென்னையிலிருந்து மூன்று நாள் அரசு முறைப் பயணமாக டெல்லிக்கு செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 11 அன்று நடைபெறவுள்ள முக்கியமான 'நிதி ஆயோக்' (Niti Aayog) ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதே இந்தப் பயணத்தின் முதன்மையான விஷயமாகும்.

    Advertisement

    இந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் ஒரே இடத்தில் பங்கேற்கவுள்ளதால், தேசிய அளவில் இந்த பயணம் பெரும் அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு மே 24ஆம் தேதியன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு, தற்போது இக்கூட்டம் நடைபெறுகிறது.

    Advertisement

    நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் எதற்காக?

    மத்திய அரசின் முதன்மை சிந்தனைக் குழுவான (Think Tank) அமைப்பான நிதி ஆயோக்-ன் (NITI Aayog) ஆலோசனைக் கூட்டம் என்பது, இந்தியாவின் தேசிய வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்தவும், கொள்கைகளை வகுக்கவும் நடத்தப்படும் மிக முக்கியமான கூட்டமாகும்.

    திட்டக்குழுவிற்கு (Planning Commission) மாற்றாக 2015-இல் அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக நாட்டின் பிரதமர் செயல்படுகிறார். இதன் மிக உயரிய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பர். பிரதமர் நரேந்திர மோடி இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார்.

    Advertisement

    இக்கூட்டத்தில் மனிதவள மேம்பாடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியாவின் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சி வரைபடம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    இதேபோல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அதிகரிப்பது மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான வழிகள் மாநில வாரியாக ஆராயப்படும்.

    இதை தாண்டி விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், சுகாதாரம், கல்வி, மற்றும் தூய்மையான குடிநீர் போன்ற மக்களின் வாழ்வாதார திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்படும்.

    மறக்க முடியாத மே 27 டெல்லி பயணம்

    தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, மே 27ஆம் தேதியன்று முதலமைச்சர் விஜய் தனது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை மேற்கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த அவர், தமிழக உள்கட்டமைப்பு மற்றும் மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். குறிப்பாக, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முற்படுவதற்கும், அம்மாநில அமைச்சர் டி.கே.சிவகுமாரின் பிடிவாதத்திற்கும் மத்திய அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

    Advertisement

    மேலும், இலங்கைச் சிறையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 58 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 266 படகுகளையும் உடனடியாக மீட்க வெளியுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

    இதோடு, மாநில அரசு விழாக்களில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலைத்தான் முதலாவதாகப் பாட வேண்டும் என்ற அறிவுறுத்தலை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பிக்க வேண்டும் என்றும், டிஆர்டிஓ (DRDO) நிறுவனத்தின் அதிநவீன வான்வழி அமைப்பு மையத்தைத் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

    நிர்மலா சீதாராமன் உடன் முக்கிய மீட்டிங்

    மோடியை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதலமைச்சர் விஜய் கடந்த டெல்லி பயணத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி (GST) நிலுவைத் தொகைகளை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் புதிய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    Advertisement

    மிக முக்கியமாக, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களுக்காகத் திட்டமிடப்பட்டு, பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் மத்திய அரசால் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு முடங்கிக் கிடக்கும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு (Metro Rail Projects) மத்திய அமைச்சகம் உடனடியாக ஒப்புதல் வழங்கி நிதிப் பங்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற அவசியத்தையும் நிதி அமைச்சரிடம் விஜய் வலுவாக முன்வைத்தார்.

    சோனியா, ராகுல் காந்தியை சந்திப்பாரா விஜய்?

    முதல்வர் விஜய்யின் முந்தைய மே 27 பயணத்தின் போதே, காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்திப்பதற்கான அஜெண்டாக்கள் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், அந்த சமயத்தில் கர்நாடக அரசியலில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே ஏற்பட்ட திடீர் ஆட்சி அதிகார பிரச்சனைகள் அந்த சந்திப்பு தற்காலிகமாகத் தள்ளிப்போனது.

    Advertisement

    தற்போது ஜூன் 10 முதல் ஜூன் 12 வரையிலான இந்த மூன்று நாள் பயணத்தில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவர்களின் இல்லத்தில் முதல்வர் விஜய் நேரில் சந்தித்து ஆலோசிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம் தவெக காங்கிரஸ் கூட்டணியில் தான் ஆட்சியை அமைத்துள்ளது.

    இதுமட்டுமன்றி, இந்தியக் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் இந்த டெல்லி பயணத்தின் போது விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has left for a crucial three-day official visit to Delhi starting today to attend the high-level NITI Aayog meeting chaired by Prime Minister Narendra Modi on June 11. The trip also carries significant political weight as Vijay is expected to meet Congress leaders Sonia Gandhi and Rahul Gandhi. தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இன்று முதல் மூன்று நாள் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஜூன் 11 அன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதுடன், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.