சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற பேச்சுகள் நிலவி வரும் நிலையில், அடுத்த தலைவராக யார் வரப்போகிறார் என்பது குறித்து கட்சிக்குள் கடும் போட்டி உருவாகியுள்ளது. குறிப்பாக, மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகிய இருவரின் பெயர்களும் தீவிரமாக பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் கூட்டணி அரசியல் பல்வேறு திருப்பங்களை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர், நடிகரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
தேசிய அளவில் கட்சியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய அரசியல் வாய்ப்புகளை தேட வேண்டும் என்ற எண்ணம் மேலிடத்தில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த சூழலில், விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது. விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் இருந்த ஆதரவு மற்றும் மாற்று அரசியல் மீதான எதிர்பார்ப்பு காரணமாக, காங்கிரஸ் தலைமை இந்த வாய்ப்பை கவனமாக ஆய்வு செய்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. போட்டியிட்ட 28 தொகுதிகளில் 5 என்ற எண்ணிக்கையிலேயே வெற்றி பெற்றது. மேலும், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை சந்தித்தது கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் முற்றிலும் மாறியது. தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை அமைத்த நிலையில், காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கியது. அதன் பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் உறவு மேலும் வலுவடைந்தது. அமைச்சரவையிலும் காங்கிரஸுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இதற்கிடையில், மாநிலங்களவை காலியிடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கிய முதலமைச்சர் விஜயின் முடிவு, இரு கட்சிகளுக்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வழிநடத்தக்கூடிய புதிய தலைமை தேவை என்ற கருத்து டெல்லி மேலிடத்தில் வலுப்பெற்றுள்ளது. அதன் காரணமாகவே மாநிலத் தலைவர் மாற்றம் குறித்து ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் திருமணம் இம்மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதன் பின்னர் அவர் பதவியில் இருந்து விலகலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், அடுத்த தலைவருக்கான பட்டியலில் இரண்டு முக்கிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் காங்கிரஸ் காரிய கமிட்டியில் செல்வாக்கு கொண்ட மாணிக்கம் தாகூர் ஒரு தரப்பின் ஆதரவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நீண்டகாலமாக தமிழ்நாடு அரசியலை நெருக்கமாக கவனித்து வரும் அவர், கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் திறன் கொண்டவர் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். மற்றொரு பக்கம், தேர்தல் வியூகங்கள் மற்றும் தரவு பகுப்பாய்வில் முக்கிய பங்காற்றி வரும் பிரவீன் சக்கரவர்த்தியின் பெயரும் முன்னிலைக்கு வந்துள்ளது. சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அவருக்கு தேசியத் தலைமையின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள் மற்றும் விஜய் தலைமையிலான அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அரசியல் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் தற்போது மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தான் முன்னணியில் இருப்பதாக காங்கிரஆ வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.தமிழக காங்கிரஸ்
ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமி அப்போது திமுக கூட்டணியை தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. குறிப்பாக செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் திமுக கூட்டணியே காங்கிரஸுக்கு பாதுகாப்பான கூட்டணி என வலியுறுத்தியது. இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது.தமிழக வெற்றிக் கழகம்
மாநிலங்களவை
மாநிலத் தலைவர்
பிரவீன் சக்கரவர்த்தி
மாணிக்கம் தாகூர்