30 ஆண்டுகளில் முதன்முறை.. விஜய் எடுத்த ஒரே ஒரு முடிவால்.. அடியோடு மாறிய தமிழ்நாடு நிர்வாகம்

  • சென்னை: தமிழக நிர்வாக வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத நடைமுறையாக, மாநிலத்தின் அனைத்துத்துறைச் செயலாளர்களின் மாதாந்திர உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலக வளாகத்தை விட்டு வெளியே, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

    Advertisement

    செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சர் அலுவலகத்திற்கான பிரம்மாண்ட கட்டுமான மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருதே இந்த இடமாற்றத்திற்குக் முக்கியக் காரணமாகும்.

    Advertisement

    நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளம்

    தற்போதைய சூழலில், தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடமான கோட்டைப் பகுதியில் இடநெருக்கடி நிலவி வருகிறது. இதனால், முதலமைச்சரின் முதன்மை அலுவலகம், செயலாளர்கள் பிரிவு மற்றும் ஆலோசனைக் கூட்டரங்கங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் நோக்கில், 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதல்வர் அலுவலகத்தை மாற்ற அரசு முடிவு செய்தது.

    இதற்காக 10-வது தளத்தில் இயங்கி வந்த செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR), சமூக வலைதளப் பிரிவு மற்றும் வணிக வரித் துறை அலுவலகங்கள் கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட மாற்று இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு வருகின்றன. அத்துடன், 10-வது தளத்தில் இருந்த புகழ்பெற்ற பிரம்மாண்ட கூட்டரங்கமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    30 ஆண்டுகளுக்குப் பின் வெளியேறும் கூட்டம்

    வழக்கமாக, அரசின் தலைமைச் செயலாளர் தலைமையிலோ அல்லது முதலமைச்சர் தலைமையிலோ நடைபெறும் துறைச் செயலாளர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்கள், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்டரங்கத்தில்தான் நடைபெறும். ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் ஒரே வரிசையில் அமரக்கூடிய வசதியும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் அங்கு மட்டுமே இருந்தன.

    தற்போது அந்த அரங்கம் சீரமைக்கப்பட்டு வருவதால், அரசின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்த மாற்று இடங்களை அதிகாரிகள் தேடத் தொடங்கினர். அண்மையில் வேளாண் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டது. இருப்பினும், அனைத்துத் துறைச் செயலாளர்களும் கலந்துகொள்ளும் விரிவான ஆய்வுக்கூட்டத்தை நடத்துவதற்குத் தேவையான இடவசதியும், பாதுகாப்பு அம்சங்களும் கலைவாணர் அரங்கத்திலேயே நிறைவாக உள்ளதால், இக்கூட்டம் அங்கு மாற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக, சில முக்கிய நிர்வாகச் சூழல்களில் மட்டுமே இத்தகைய கூட்டங்கள் செயலகப் பகுதிக்கு வெளியே நடத்தப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு, முழுமையான அனைத்துச் செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டத் தொடர் தலைமைச் செயலக எல்லைக்கு வெளியே நடப்பது இதுவே முதன்முறை என்பதால், இது அதிகார வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

    நிர்வாகப் பணிகளுக்குப் புதிய வேகம்

    இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் முக்கியத் திட்டங்களின் தற்போதைய நிலை, வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை தொடர்பான தயாரிப்புகள், திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் அமலாக்கம் குறித்து அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் வரை, இது போன்ற உயர் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டங்கள் கலைவாணர் அரங்கத்திலேயே தொடர வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English Summary

    TN Department Secretaries Meeting Held Outside Secretariat After 30 Years