ரூ.755 கோடி தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை.. ஜாய் ஆலுக்காஸ் தட்டித்தூக்கியது எப்படி? காரணம்!

  • சென்னை: விஜய் அரசின் மிக முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றான 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான கொள்முதல் டெண்டரை முன்னணி நகைக்கடை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் வென்றுள்ளது. ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு இந்த டெண்டர் கிடைத்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    அந்த நிறுவனம் மிகக் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு முதலிடம் பிடித்துள்ளது. தங்கத்தின் அடிப்படை விலையைத் தவிர்த்து, செய்கூலி, பேக்கிங் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட கூடுதல் சேவைகளுக்கு வெறும் 1 பைசா மட்டுமே கோரி இந்நிறுவனம் டெண்டரை வசப்படுத்தியுள்ளது.

    Advertisement

    திட்டத்தின் நோக்கம் மற்றும் பின்னணி

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் 22 கேரட் (BIS 916 ஹால்மார்க்) தங்க மோதிரம் மற்றும் பரிசுப் பெட்டகம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

    பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கப்படவுள்ள இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு இந்த தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகளை அதிகரிப்பதையும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் இந்த டெண்டரை நடத்தியது.

    Advertisement

    1 பைசாவில் வீழ்த்திய வியூகம்

    இந்த டெண்டர் விதிமுறைகளின்படி, 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் அடிப்படை சந்தை விலை அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவானதாக நிர்ணயிக்கப்பட்டது. எனவே, மோதிரத்தை உருவாக்குவதற்கான செய்கூலி, ஹால்மார்க்கிங் சான்றிதழ், பிரிக்க முடியாத பாலி கார்பனேட் பேக்கிங், காப்பீடு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றை மட்டுமே நிறுவனங்கள் ஏலத் தொகையாகக் குறிப்பிட வேண்டும்.

    இதில் பெரும்பாலான நகை நிறுவனங்கள் ஒரு மோதிரத்திற்கு ரூ.400 முதல் ரூ.1,000 வரை கூடுதல் செலவைக் குறிப்பிட்ட நிலையில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் விநியோக சேவைகளுக்கும் சேர்த்து ஒரு மோதிரத்திற்கு வெறும் 0.01 ரூபாய் மட்டுமே கட்டணமாகக் குறிப்பிட்டது. இதன் மூலம் கூடுதல் சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டு, வர்த்தக ரீதியாக மற்ற நிறுவனங்களை விட மிகக் குறைந்த தொகையை பதிவு செய்து ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது.

    Advertisement

    டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் ஏல விவரம்

    L1 : ஜாய் ஆலுக்காஸ் இந்தியா லிமிடெட்: ரூ.0.01

    L2 : ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்: ரூ.410.97

    L3 : உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்: ரூ.822.97

    L4 : டைட்டன் கம்பெனி லிமிடெட்: ரூ.832.24

    L5 : மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் லிமிடெட்: ரூ.871.38

    L6 : எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்: ரூ.947.60

    L7 : தி கேடிஎம் ஜூவல்லரி லிமிடெட்: ரூ.964.08

    L8 : மோகன்லால் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட்: ரூ.977.47

    Advertisement

    L9 : கல்யாண் ஜூவல்லர்ஸ் லிமிடெட்: ரூ.978.50

    L10 : ஜாவேரி அண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட்: ரூ.1,325.61

    L11 : சரவணா ஸ்டோர்ஸ் (ஜூவல்) சூப்பர் லிமிடெட்: ரூ.15,356.27

    இரண்டாவது இடத்தில் உள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஒரு மோதிரத்திற்கு ரூ.410.97 எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கும் ஜாய் ஆலுக்காஸ் குறிப்பிட்ட 1 பைசாவுக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டது.

    English Summary

    TN Gold Ring Scheme: Joyalukkas Quotes Just 1 Paisa To Win Rs 755-Crore Govt Tender