எம்எல்ஏக்களுக்கு கார் உள்பட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடி ஒப்புதல்! தவெக அரசு ஹேப்பி

  • சென்னை: தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா மட்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடந்தது. இந்தக் கூட்டத் தொடரில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பொது பட்ஜெட்டும் , 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    இந்த நிலையில் இந்த சட்டசபை கூட்டத் தொடரில் மாநிலத்தின் வளர்ச்சி, நிதி மேலாண்மை, நகர்ப்புற நிர்வாகம், டிஎன்பிஎஸ்சி, தனியார் பல்கலைக்கழக விவகாரம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் விவாதிக்கப்பட்டன.

    அந்த வகையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களும் ஆளுநர் அர்லேகரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.

    அதில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தாக்கலான மதுபானங்களுக்கான மதிப்புக் கூட்டு வரிச் சட்ட மசோதாவிற்கு செப் 2 ஆம் தேதியே ஒப்புதல் அளித்துவிட்டார்.

    செப்டம்பர் 8 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நகர் ஊரமைப்புத் திருத்தச் சட்டம், முதலீட்டு ஊக்குவிப்பு திருத்த சட்டம், ஊரக உள்ளாட்சிகளின் தனி அலுவலர் பதவி கால நீடிப்பு சட்டம், நிதி மசோதா, எம்எல்ஏக்களுக்கு கார் உள்ளிட்ட 6 மசோதாக்களுக்கு செப்டம்பர் 12 ஆம் தேதி , அதாவது 4 நாட்களிலேயே ஒப்புதல் வழங்கிவிட்டார்.

    Advertisement

    அது போல் செப் 8ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழக வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் திருத்த மசோதா, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிகள் தொடர்பாந 2 மசோதாக்கள், மதிப்பு கூட்டு வரி சம்பந்தப்பட்ட 2 மசோதாக்கள் என 5 மசோதாக்களுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதிக்குள் ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டார். அதாவது வெறும் 5 நாட்களிலேயே அவர் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இவ்வாறாக 12 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலை பெற்றுள்ளன.

    அதில் தனியார் பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான ஒரு சட்ட மசோதா மட்டும் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. அது கூட உயர்கல்வித் துறை, பல்கலைக்கழக விதிகளுடன் தொடர்புள்ள மசோதா என்பதால் அது மட்டும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த காலங்களில் அதாவது தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்த போது மசோதாக்கள் மாதக்கணக்கில் ஒப்புதல் அளிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கும். ஆனால் கேரள ஆளுநர் அர்லேகர், தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்துள்ள நிலையில் தற்போது மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் அளிக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Tamil nadu governor Rajendra Arlekar gives nod for 12 bills passed in Tamil nadu assembly in TVK government first session.