நீட், FCRA திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தமிழக அரசு நாளை தீர்மானம்.. முதல்வர் விஜய் பிளான்

  • சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நாளை தமிழக அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிகிறார். அதேபோல, FCRA திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிய உள்ளார்.

    Advertisement

    நீட் தேர்வு ரத்து செய்துவிட்டு 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் நாளை தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானம் நாளை சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக தமிழக சட்டமன்றத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில், நீட் தேர்வை திரும்பப் பெற்று மாநில மருத்துவ பாட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தாக்கல் செய்ய உள்ளார்.

    நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கடந்த 2021-ல் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், குடியரசுத்தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்துவரக்கூடிய நிலையில், நாளை சட்டமன்றத்தில் அரசு கொண்டு வரப்பட உள்ள தீர்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Advertisement

    நீட் வினாத் தாள் கசிவு, முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இந்த தேர்வு இழந்துள்ளது எனவே, இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி என அமைச்சர் அருண்ராஜ் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார்.

    அதேபோல, மற்றொரு தீர்மானமாக, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளார். இந்தத் தீர்மானங்களின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

    Advertisement

    முன்னதாக இன்று சட்டமன்றத்தில், தமிழக முதல்வர் விஜய் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார். கல்வி நிறுவனங்கள் - அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது கட்டாயம் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டு வந்தார். முதல்வர் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில் ஒரு மனதாக நிறைவேறியது.

    English Summary

    NEET exam and FCRA: The Tamil Nadu government is set to move a resolution against the NEET exam in the State Assembly tomorrow; Minister for Medical and Family Welfare Arunraj will propose this resolution. Similarly, the government will also move a resolution urging the withdrawal of the FCRA amendment; Minister Rajmohan is set to propose this resolution.