சுப்ரீம் கோர்டில் தமிழக அரசுக்காக வாதாட ப சிதம்பரம் உள்பட 35 மூத்த வழக்கறிஞர்கள் நியமனம்.. லிஸ்ட்!

  • சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்காக வாதாட அரசு சார்பில் 35 மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரமும் இடம் பெற்றுள்ளார். ப. சிதம்பரம் மட்டுமின்றி கேசி வேணுகோபால், அபிஷேக் சிங்வி, கபில் சிபில், முகுல் ரோத்தகி உள்ளிட்ட பிரபலமான மூத்த வழக்கறிஞர்கள் பலர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுகவை தோற்கடித்து தவெக முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தமிழக அரசுக்காக உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர்.

    Advertisement

    35 பேர் பட்டியல்

    தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக விஜய் நாராயணன் நியமனம் செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்குகளுக்காக வாதாட வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக அட்வகேட் ஜெனரலுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருப்பவர்கள், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடும் தமிழகத்தை சேர்ந்த சீனியர் வழக்கறிஞர்கள் என 35 பேரின் பட்டியலை அரசுக்கு பரிந்துரை செய்தார்.

    மூத்த வழக்கறிஞராக ப சிதம்பரம்

    இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக 35 மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்துள்ளது. இந்த பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரமும் இடம் பெற்றுள்ளார். நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவராக மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும் ப. சிதம்பரம் உள்ளார்.

    Advertisement

    சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் மூத்த வழக்கறிஞராக பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார். காங்கிரஸ் சார்பாகவும் பல முக்கிய வழக்குகளில் ஆஜாராகியுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

    யார் யாருக்கு இடம்?

    ப. சிதம்பரம் மட்டுமின்றி இந்த பட்டியலில் பிரபலமான மூத்த வழக்கறிஞர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். கேசி வேணுகோபால், அபிஷேக் சிங்வி, கபில் சிபில், முகுல் ரோத்தகி, சிஎஸ் வைத்தியநாதன், கோபால் சுப்பிரமணியன், டிஎஸ் சிவஞானம், எஸ். நாகமுத்து, பின் பிரகாஷ், எம் சத்யநாராயணன், கே. ராதா கிருஷ்ணன், ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வரும் வழக்குகளில் இந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடுவார்கள்.

    English Summary

    TN Govt panel: Following the change of government in Tamil Nadu, 35 senior advocates have been appointed to represent the state government before the Supreme Court. Senior Congress leader and former Finance Minister P. Chidambaram is included in this list. Apart from him, the list features several other prominent senior advocates, including K.C. Venugopal, Abhishek Singhvi, Kapil Sibal, and Mukul Rohatgi.