சென்னையில் எங்கே அமைகிறது புதிய தலைமைச் செயலகம்? லிஸ்ட்டில் இருக்கும் 3 இடங்கள் என்னென்ன?

  • சென்னை: சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜோசப் விஜய் இன்று அறிவித்துள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறறது. இந்நிலையில் விதி எண் 110-ன் கீழ், முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு திட்டங்களை அறித்தார். அதில், சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    Advertisement

    புதிய தலைமைச் செயலகம்

    தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசுகையில், "சுமார் 107 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இவ்வளாகத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின்கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டிற்காக சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிலப்பரப்பு இந்தியப் பாதுகாப்புத் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதால், இவ்வளாகத்தை விரிவுபடுத்தவோ, மேம்படுத்தவோ முடியவில்லை.

    அடுத்த நூறாண்டுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன்கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்." என்று அறிவித்தார்.

    Advertisement

    3 இடங்கள் பரிசீலனை

    ஒருங்கிணைந்த புதிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், இதற்காக மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று இடங்களில் இறுதியாக முடிவு செய்யப்படும் இடத்தை இம்மாதத்தின் மத்தியில் தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி, நந்தம்பாக்கத்தில் தற்போது செயல்படாத இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் இருந்த இடம் ஆகிய மூன்று இடங்களையே தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் ஒன்றை தேர்வு செய்து அரசு அறிவிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம்

    கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் பகுதி, ஆளுநர் மாளிகையான லோக் பவனுக்கு எதிரே உள்ளது. இதன் அருகில்தான் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு அகலமான சர்தார் படேல் சாலை உள்ளது. எனவே, எளிதில் செல்வதற்கு ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் 43 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2003-ல் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்டினப்பாக்கத்தைப் பொறுத்தவரை மயிலாப்பூர் மற்றும் அடையாறுக்கு அருகில் உள்ளது. இந்தப் பகுதி முதல்வர் விஜய்யின் இல்லம் மற்றும் தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் இருந்து தற்போதைய தலைமைச் செயலகம் செல்லும் தூரத்தை விட குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    நந்தம்பாக்கத்தில் இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்த சுமார் 62 ஏக்கர் நிலம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியில் சென்னை வர்த்தக மையம் அமைக்கப்பட்டது. எஞ்சியுள்ள இடம் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பரிசீலனையில் உள்ளது. நந்தம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில் சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Tamil Nadu government, which has identified three sites for the proposed Assembly-Secretariat complex in Chennai, is expected to make its final choice and announce it by this month.