பட்டினப்பாக்கம்.. ஒரு பக்கம் வீடு இடிக்க டெண்டர்.. இன்னொரு பக்கம் ஆவணமே இல்லை! ட்விஸ்ட் அடித்த அரசு

  • சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசின் முரண்பாடான நிலைப்பாடு பொதுமக்களையும் அரசியல் வட்டாரங்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    ஒருபுறம் பட்டினப்பாக்கத்தில் உள்ள குடியிருப்புகளை இடிப்பதற்கான டெண்டரை அரசு வெளியிட்டுள்ள நிலையில், மறுபுறம் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை என்று பொதுப்பணித்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது.

    Advertisement

    குடியிருப்புகளை இடிக்க டெண்டர்: வேகம் காட்டிய அரசு

    தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி நிலவுவதால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த கட்டடம் கட்டப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 26 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில், 15 மாடிகளுடன் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்தைக் கட்ட திட்டமிடப்பட்டது.

    Advertisement

    இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், அங்குள்ள பாழடைந்த பழைய அரசு ஊழியர் குடியிருப்புகளை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரியது. இந்த டெண்டர் அறிவிப்பு வெளியானதும், அரசு பட்டினப்பாக்கத்திலேயே தலைமைச் செயலகத்தை அமைப்பதில் உறுதியாக இருக்கிறது என்றே அனைவரும் கருதினர்.

    மீனவர் எழுப்பிய கேள்வியும் பொதுப்பணித்துறையின் பகீர் பதிலும்

    ஆனால், இந்த விவகாரத்தில் தற்போது முற்றிலும் எதிர்பாராத ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்ற மீனவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பொதுப்பணித்துறையிடம் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

    Advertisement
    தலைமைச் செயலகம் கட்ட பட்டினப்பாக்கம் தேர்வானது எப்படி? எங்களுக்கே தெரியாது.. விஜய் அரசு RTI-ல் பதில்

    அதில்:

    1. புதிய தலைமைச் செயலகத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மற்றும் சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டதா?
    2. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டனவா?
    3. திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பணிவரம்பு ஆவணங்கள் எங்கே?
    4. ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீடு மற்றும் 20 லட்சம் சதுர அடி பரப்பளவு எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது?

    என்று நான்கு நேரடி கேள்விகளை அவர் முன்வைத்திருந்தார்.

    இந்த மனுவுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ள பொதுப்பணித்துறை, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான எந்தவொரு ஆவணங்களும் பொதுப்பணித்துறையிடம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சாத்தியக்கூறு அறிக்கை, விரிவான திட்ட மதிப்பீட்டு ஆவணங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் என எதற்குமே துறையிடம் ஆவணங்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement
    பட்டினப்பாக்கம் பழைய குடியிருப்புகளை இடிக்க முடிவு! தமிழக அரசு திடீர் அறிவிப்பு! வருது தலைமை செயலகம்

    அரசின் முரண்பாடான நிலைப்பாடு: வலுக்கும் விமர்சனங்கள்

    கட்டடங்களை இடிப்பதற்கு வீட்டு வசதி வாரியம் டெண்டர் விடுகிறது; ஆனால், தலைமைச் செயலகம் அமைப்பதற்கான எந்தவொரு அடிப்படைத் திட்ட ஆவணங்களும் தங்களிடம் இல்லை என்று அரசுத் துறையே கூறுகிறது. அரசின் இந்த இரட்டை வேடம் மற்றும் முன்னுக்குப்பின் முரணான நிலைப்பாடு கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

    ஏற்கனவே இந்தத் திட்டத்திற்கு எதிராக நோச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் உள்பட 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடலுக்குச் செல்லும் வழிகள் தடைபடும், மீன் பிடிக்கும் வலைகளை உலர்த்தும் இடங்கள் பறிபோகும் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த பகுதி ஆமைகள் முட்டையிடும் கடற்கரை மண்டலம் என்பதால் கட்டுமானம் கூடாது என்று எச்சரிக்கின்றனர்.

    Advertisement

    இவ்வளவு கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், எந்தவொரு சாத்தியக்கூறு ஆய்வோ அல்லது முறையான திட்ட அறிக்கையோ இல்லாமலேயே அரசு அவசர அவசரமாக நிலத்தை இடிக்க டெண்டர் விட்டுள்ளதா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. துறை சார்ந்த ஆவணங்களே இல்லாதபோது திட்டப் பணிகள் எப்படி தொடங்கப்பட்டன என்ற பொதுப்பணித்துறையின் RTI பதில், ஒட்டுமொத்த திட்டத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தலைமைச் செயலகத் திட்டத்தில் அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.

    English Summary

    TN Govt's Stand: Demolition Tender Floated, But PWD Cites "No Records" for Pattinapakkam Secretariat