கோவை சிறுமி கொலை வழக்கு.. சிரித்து கொண்டே பதில் அளித்தாரா அமைச்சர் கீர்த்தனா? அவரே கொடுத்த விளக்கம்!

  • சென்னை: கோவை சிறுமி கொலை வழக்கு தொடர்பான கேள்வியின் போது அமைச்சர் கீர்த்தனா சிரித்ததாக சர்ச்சையான நிலையில் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பு முடிவடைந்த போது இயல்பாகவே சிரித்ததாக கூறியுள்ள கீர்த்தனா, தனது உடல் மொழியை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

    Advertisement

    கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 10 வயது மகள் கடந்த 21ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த நிலையில், திடீரென மாயமானார். குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால் கண்ணம்பாளையம் செல்லும் வழியில் உள்ள தென்னந்தோப்பில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    Advertisement

    இதுதொடர்பான விசாரணையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்தி என்ற இளைஞர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதற்கு அவரின் நண்பர் மோகன் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.

    பல்வேறு தரப்பினரும் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே கொலை சிறுமி கொலை வழக்கு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் கீர்த்தனா சிரித்து கொண்டே பதில் அளித்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் அதிகமாக பரவியது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    இதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். அதில் கீர்த்தனா, தொழில்துறை தொடர்பான அறிமுகக் கூட்டத்தை முடித்து பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியே வந்தபோது, கேள்வி பதில்கள் முடிந்த தருணத்தில் இயல்பாக நான் சிரித்தேன். அது எந்தக் கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பல்ல.

    ஆனால் அந்த உடல் மொழியை தவறாகப் புரிந்து கொண்டு, அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடுஞ்செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த சம்பவத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. ஒரு குழந்தைக்கான நீதியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் தான் இந்த அரசின் முதல் முன்னுரிமை. இத்தகைய உணர்வுப்பூர்வமான சூழ்நிலையிலும் அடிப்படையற்ற விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற ட்ரோலிங் நடைபெறுவது கவலைக்குரியது.

    எதிர்க்கட்சியை விமர்சிப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் உண்மைகளை திரித்து, ஒருவரின் தனிப்பட்ட தருணங்களையே அரசியல் ஆயுதமாக மாற்றுவது சமூகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. தமிழ்நாடு அரசு மக்கள் பாதுகாப்பிலும், நீதியிலும் எந்த சமரசமும் செய்யாது என்று பதிவிட்டுள்ளார்.

    Topics: #tvk #vijay

    English Summary

    TN Minister Keerthana Denies Laughing at Coimbatore Minor's Murder, Blames Opposition for Out-of-Context Video