தொகுதி மறுவரையறை மசோதா: முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பிக்கள் கூட்டம் நிறைவு! 37 பேர் புறக்கணிப்பு

  • சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசிக்க சென்னையில் இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக எம்.பி-க்கள் கூட்டம் நடைபெற்றது. 2 மணி நேரத்திற்கு மேலாக இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, மநீம எம்.பிக்கள் கலந்து கொள்ளவில்லை. மொத்தமுள்ள 57 எம்.பிக்களில் 37 எம்.பிக்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

    Advertisement

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் இந்த சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் அழைப்பு விடுத்தார்.

    மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கின் மூன்றாம் தளத்தில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது.

    Advertisement

    இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக எம்.பிக்கள் கலந்து கொள்வார்களா அல்லது புறக்கணிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது.

    திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி வெளியிட்ட அறிக்கையில், "தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழகத்தின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார்.

    Advertisement

    'தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்' என்ற முழக்கத்தை முன்வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் எங்கள் தலைவர் ஓரணியில் திரட்டிக் காட்டினார். அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட முன்வரைவை பாஜக கொண்டுவந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார்.

    தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்ட முன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் - அது இன்னும் கையில் கிடைக்கப்பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை.

    Advertisement

    தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக தமிழகத்தின் உயிர்ப்பிரச்சினையான மேகேதாட்டு அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் துறை முருகன், நேற்று திமுக-வின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள தவெக அரசின் இன்றைய கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது." எனத் தெரிவித்தார்.

    அதன்படி, திமுக இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தது. அதிமுக, பாமக, தேமுதிக, மநீம ஆகிய கட்சிகளும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். மொத்தமுள்ள 57 எம்.பிக்களில் 37 எம்.பிக்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். 19 எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் எம்.பி சுதா இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை. 2 மணி நேரத்திற்கு மேலாக இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

    English Summary

    A meeting of Tamil Nadu MPs is being held in Chennai today, presided over by Chief Minister Joseph Vijay, to discuss the constituency delimitation bill. A question has arisen as to whether DMK MPs will participate in this meeting or boycott it.