7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்கு விடுதிகளில் பாரபட்சம்? தனியார் கல்லூரிகளில் நடக்கும் கொடூரம்!

  • சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி கனவை நனவாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்கள், சில முன்னணி தனியார் மற்றும் சுயநிதி தொழிற்கல்லூரி விடுதிகளில் கடும் பாகுபாட்டிற்கும் பாரபட்சத்திற்கும் ஆளாக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    தங்குமிடம், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்குவதில் இந்த மாணவர்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போல் நடத்தப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஒரே அறையில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த அ. மணிகண்டன் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தனியார் பொறியியல் மற்றும் தொழிற்கல்லூரி விடுதிகளில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களை பொதுப் பிரிவு மாணவர்களுடன் தங்க வைக்காமல் தனியாகப் பிரித்து தங்க வைப்பதாகக் கூறப்படுகிறது.

    குறிப்பாக, வழக்கமான கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய தனி அறைகள் ஒதுக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி ஒதுக்கீட்டு மாணவர்களை மட்டும் ஒரே சிறிய அறையில் 10-க்கும் மேற்பட்டோரை அடைத்து வைப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போதுமான காற்றோட்டம், படிப்பதற்கான மேசை மற்றும் தூங்குவதற்கான உரிய இடவசதி கூட இன்றி மாணவர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    Advertisement

    உணவிலும் அடிப்படை வசதிகளிலும் பாகுபாடு

    தங்குமிடம் மட்டுமல்லாது, விடுதி உணவகங்களிலும் இம்மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி தங்கும் பிற மாணவர்களுக்கு வழங்கப்படும் தரமான உணவும் கவனிப்பும், அரசு ஒதுக்கீட்டில் வந்த மாணவர்களுக்கு மறுக்கப்படுவதாகவும், தரமற்ற முறையில் உணவு பரிமாறப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், வளாகத்தில் உள்ள நூலகம், இணைய வசதி, விளையாட்டு அரங்கம் போன்ற இதர பொது வசதிகளைப் பயன்படுத்துவதிலும் கூட மறைமுகத் தடைகளும் கெடுபிடிகளும் விதிக்கப்படுவதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மாணவர்களின் குமுறல்

    இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் பேசுகையில், "நாங்கள் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும், அரசுப் பள்ளியில் இரவு பகலாகக் கடுமையாக உழைத்துப் படித்துதான் இந்தத் தொழிற்கல்வி இடத்தைப் பெற்றோம். ஆனால், விடுதிக்குள் நுழைந்ததும் நாங்கள் 7.5% ஒதுக்கீட்டில் வந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தனிமைப்படுத்தப்படுவது எங்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது," என்றார்.

    Advertisement

    மற்றொரு மாணவர் தெரிவிக்கையில், "முழுக் கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு சிறந்த அறைகளும், எங்களுக்கு மோசமான தங்குமிடமும் வழங்கப்படுவது எங்களை தாழ்வுணர்ச்சிக்கு தள்ளுகிறது. சேர்க்கை முறை எதுவாக இருந்தாலும், விடுதிக்குள் அனைவரும் சமமாகவே நடத்தப்பட வேண்டும்," என்று ஆதங்கப்பட்டார். இத்தகைய தொடர் அவமதிப்புகளும் ஒதுக்குதல்களும் அரசுப் பள்ளி மாணவர்களிடையே தீவிர தாழ்வு மனப்பான்மையையும், கடுமையான உளவியல் அழுத்தத்தையும் உருவாக்குவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

    வலியுறுத்தப்படும் கோரிக்கைகள்

    இப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு தனியார் கல்லூரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கல்லூரி விடுதிகளில் ஒரு அறையில் அதிகபட்சமாக 4 மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதியை அரசு கட்டாயமாக்க வேண்டும். கூடுதல் அறைகள் இல்லாத பட்சத்தில், 7.5% ஒதுக்கீட்டு மாணவர்களைத் தனியாகப் பிரிக்காமல் பொதுப் பிரிவு மாணவர்களுடன் சமமாக இணைத்துத் தங்க வைக்க வேண்டும்.

    Advertisement

    தனியார் கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் பாகுபாடு நிலவுகிறதா என்பதைக் கண்டறிய மாநில மற்றும் மாவட்ட அளவிலான சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, அவ்வப்போது திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

    விடுதிகளில் நடைபெறும் அடக்குமுறைகள் மற்றும் பாகுபாடுகள் குறித்து மாணவர்கள் அச்சமின்றி புகார் தெரிவிக்க ஏதுவாக, ரகசியத்தன்மை கொண்ட கட்டணமில்லா உதவி எண் மற்றும் தனி இணையதள வசதியை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.

    அரசுப் பள்ளி மாணவர்களின் சமூக நீதியைப் பாதுகாக்கவும், அவர்களின் கல்வி மற்றும் உளவியல் நலனை உறுதி செய்யவும் தமிழக அரசு உடனடியாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    TN Private Colleges Under Fire: Allegations of Discrimination Against 7.5% Quota Students