இப்படியே போனால்.. சோளி முடிஞ்சிடும்! கடுமையான நிதி நெருக்கடி.. ரேஷன் கடைகள் முடங்கும் அபாயம்!

  • சென்னை: தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளுக்கான மானியத் தொகையான ரூ.700 கோடியை மாநில அரசு வழங்காததால், கூட்டுறவுச் சங்கங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதனால் பணியாளர்களுக்கான ஊதியம், கடை வாடகை உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகளைக் கூட மேற்கொள்ள முடியாமல் சங்கங்கள் திணறி வருகின்றன.

    Advertisement

    35,000 ரேஷன் கடைகளின் இயக்கம்

    தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் கீழ் சுமார் 35,000 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நாள்தோறும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    இந்த ரேஷன் கடைகளை நடத்துவதற்குப் பல்வேறு பராமரிப்புச் செலவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கடைகளுக்கான வாடகை, மின்சாரக் கட்டணம், கூட்டுறவுத்துறைகளில் இருந்து பொருட்களைக் கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவுகள் போன்ற செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்ட மாநில அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு ரூ.350 கோடி முதல் ரூ.400 கோடி வரை மானியமாக கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

    ரூ.700 கோடி நிலுவைத் தொகை

    கடந்த சில ஆண்டுகளாக இந்த மானியத் தொகை கூட்டுறவுச் சங்கங்களுக்கு முழுமையாகப் போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டு வரை மட்டுமே அரசிடமிருந்து வர வேண்டிய மானியத் தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வந்த நிதியாண்டுகளில் மானியக் கோரிக்கைகளுக்கான நிதி அரைகுறையாகவே விடுவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதன் காரணமாக, தற்போது வரை நிலுவையில் உள்ள மொத்த மானிய பாக்கித் தொகை ரூ.700 கோடியைத் தொட்டுள்ளது. இந்த மிகப்பெரிய தொகை கிடைக்காததால், பெரும்பாலான கூட்டுறவுச் சங்கங்கள் தங்களின் அன்றாட நிர்வாகச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் கடன் சுமையில் மூழ்கியுள்ளன.

    முடங்கும் சேவைகள் மற்றும் ஊழியர் பாதிப்பு

    மானியம் வராததால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய ஊதியம் தாமதமாகிறது. மேலும், வாடகை நிலுவை காரணமாகப் பல இடங்களில் கடை உரிமையாளர்களுடன் சிக்கல் உருவாகி வருகிறது. மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாத சூழலும், சரக்குகளை ஏற்றி வரும் வாகனக் கட்டணத்தைக் கொடுக்க முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    இதுமட்டுமன்றி, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் சிறப்புத் திட்டத்திற்கும் தேவையான நிதி ஒதுக்கீடு அரசிடமிருந்து முறையாக வந்து சேரவில்லை என்று ஊழியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    கூட்டுறவுத் துறையின் மானியக் கோரிக்கையில், சங்கங்களுக்குச் சேர வேண்டிய ரூ.700 கோடி மானிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க அரசு முறைப்படி அறிவிக்க வேண்டும்.

    ரேஷன் கடைகளை இயக்குவதற்காகக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய மானியம் 2021-22 காலம் வரை மட்டுமே முழுமையாகக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் நிதி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கூட்டுறவு அமைப்புகளின் நிதி வருவாயை சீரமைக்கவும், மக்களுக்கு எவ்வித தடங்கலுமின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நிலுவை மானியத்தை விடுவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

    English Summary

    TN Ration Shops in Crisis: ₹700 Crore Unpaid Subsidies may lead to close down of shops